பாடசாலை விடுமுறைக் காலத்தில் பட்டம் விடும் போது சிறுவர்களுக்கு ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருவதால், அவர்களின் பாதுகாப்பில் பெற்றோர்களும் பெரியவர்களும் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
வறண்ட காலநிலை மற்றும் பாடசாலை விடுமுறை காரணமாக தற்போது சிறுவர்கள் மத்தியில் பட்டம் விடும் நடவடிக்கை அதிகரித்துள்ள நிலையில், கவனக்குறைவாக பட்டம் விடுவதால் கடுமையான காயங்கள் மட்டுமன்றி உயிரிழப்புகளும் ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக உயரமான இடங்களில் இருந்து பட்டம் விடும் போது கீழே விழும் அபாயம் காணப்படுவதுடன், குழுக்களாக இணைந்து பட்டம் விடும் போது ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்வதாலும் தவறி விழுவதாலும் விபத்துகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, உயர் அழுத்த மின்கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தானது எனவும் வைத்திய நிபுணர் எச்சரித்துள்ளார்.
மின்கடத்தும் தன்மை கொண்ட நூல்கள் உயர் அழுத்த மின்கம்பிகளுடன் தொடர்பு கொள்ளும் போது மின்சாரம் தாக்கி, கைகள், தோள்பட்டை மற்றும் மார்புப் பகுதிகளில் உள்ள திசுக்கள், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும். சில சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலையும் ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மின்கடத்தும் நூல்கள் உயர் அழுத்த மின்கம்பிகளுடன் உரசும் சந்தர்ப்பங்களில் உடனடி உயிரிழப்பும் ஏற்படக்கூடும் என்பதால், மின்கம்பிகள் அமைந்துள்ள பகுதிகளில் சிறுவர்கள் பட்டம் விடுவதைத் தவிர்க்க பெற்றோர்களும் பெரியவர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறுவர்களின் பொழுதுபோக்கிற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்திற்கு இணையாக அவர்களின் உயிர் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் எனவும், பட்டம் விடும் போது ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுப்பதற்கு அனைவரும் விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் எனவும் வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர மேலும் தெரிவித்துள்ளார்.









