- சந்தக்கவிமணி கிண்ணியா அமீர் அலி தலைமை
ஐ. ஏ. காதிர் கான்
வலம்புரி கவிதா வட்டத்தின்
95 ஆவது கவியரங்கு, (26) பௌர்ணமி தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு, பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றது.
கவிஞர் “சந்தக்கவிமணி” கிண்ணியா அமீர் அலியின் தலைமையில் கவியரங்கு இடம்பெற்றது. வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நிகழ்வினை நெறிப்படுத்தினார்.
செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் வரவேற்புரையும், பொருளாளர் ஈழ கணேஷ் நன்றியுரையும் வழங்கினர்.
அண்மையில் மறைந்த பேராசியர் செ. யோகராசா, பேருவளையில் வசித்து வந்த கவிஞர் வாழைத்தோட்டம் வசீரின் தம்பி, கவிஞர் ரிஸான் ஸெய்ன், மருதமுனை ஹரீஸாவின் தந்தை பி.எம்.எம்.ஏ. காதர் ஆகியோரும், சுனாமி பேரலையில் (2024) மறைந்தோரும் கவியரங்கில் நினைவு கூரப்பட்டனர்.
பிரான்ஸ் சர்வதேச தமிழ் வானொலியின் 27 ஆவது ஆண்டு விழா, அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது, எமது வகவச் செயலாளரும் உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கொழும்புக் கிளைத் தலைவருமான இளநெஞ்சன் முர்ஷிதீன், அங்கே விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். அதே போன்று, அங்கே விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட வகவ கவிஞர் சுபாஷினி பிரணவனுக்கும், வகவம் தனது பாராட்டைத் தெரிவித்தது.
(பிரான்ஸ் சர்வதேச தமிழ் வானொலி (France ITR) பணிப்பாளர் திரு. விசு செல்வராசா அவர்கள், வலம்புரி கவிதா வட்ட கவியரங்கில் அதிதியாகக் கலந்து கொண்ட போது, வகவக் கவியரங்கு முதன்முறையாக நேரடியாக சர்வதேச வானொலியில் ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது)
கிண்ணியா அமீர் அலியின் தலைமையில் இடம்பெற்ற இச்சிறப்புக்
கவியரங்கில், கவிஞர்கள் தமிழ்த் தென்றல் அலி அக்பர், கவிஞர் திலகம் எம். பிரேம்ராஜ், ரவூப் ஹஸீர், இளநெஞ்சன் முர்ஷிதீன், வாழைத்தோட்டம் எம். வசீர், வதிரி சி. ரவீந்திரன், வாசுகி பி. வாசு, ந. தாமரைச் செல்வி, கஸ்ஸாலி அஷ் ஷம்ஸ், பவானி சச்சிதானந்தன், கமர்ஜான் பீபி, சஜூதா அமீன், ராஜா நித்திலன், சிந்தனைப்பிரியன் முஸம்மில், லைலா அக்ஷியா, எஹலியகொட முஸ்னி முர்ஷித், தி. ஸ்ரீதரன், ஆர்.எஸ்.ரஸ்மியா,
இ. கலைநிலா, எஸ். தனபாலன்,
தாட்சாயினி சர்மா, ரகீப் அல் ஹாதி, மினுவாங்கொடை ஏ. சிவகுமார், எம். பி. எம். சித்தீக், சீ. தனூஷிகா ஆகியோர் கவி மழைகளைப் பொழிந்து, இம்முறை கவியரங்கை அலங்கரித்தனர்.
கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னாஹ், கலாபூஷணம் மௌலவி ஐ.ஏ. காதிர் கான், மணவை அசோகன், சு. ஜெகதீஸ்வரன், மலாய்கவி டிவாங்ஸோ, ஏ.கே. இளங்கோ, ஏ.டப்ளியூ. அப்துல் அஸீஸ், பர்ஹாத் சித்தீக், ராஹிலா ஹலாம், கே. யோகேஸ்வரி, ரிஸ்மினா ரபீக், கவிதா இளங்கோ, உணர்ச்சிப் பூக்கள் ஆதில் போன்றோர் பூக்களாகப் பரந்து, அரங்கை மேலும் வாசனையூட்டினர்.
வகவத் தலைவர் கவிஞர் என். நஜ்முல் ஹுஸைன் இச்சிறப்புக் கவியரங்கில் கருத்துத் தெரிவிக்கும்போது, “பல தடைகளையும் தாண்டி எமது வகவம், 95 ஆவது அகவையில் காலடி எடுத்து வைத்துள்ளது. இன்னும் ஐந்து மாதங்களில் 100 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடப்போகிறது என்பதையும் பெருமிதத்தோடு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இந்த நிலையில், சிந்தனைக்கு விருந்தாக பல சுவாரஸ்யமான அம்சங்களையும் வகவத்தின் நிழலின் கீழ் கவிதை வடிவில் நாம் ஒழுங்கு செய்துள்ளோம். கவிஞர்களின் பங்களிப்போடு, சிறப்புக் கவிதை மலர் ஒன்றையும் வெளியிடவுள்ளோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.
வகவம் கவியரங்கு, மூத்த கவிஞர்களுக்கு மாத்திரமல்லாது பழைய, புதிய, பழகும் மற்றும் இலைமறை காயாக மறைந்திருக்கும், கவிதைக் கலையை விரும்பும் அனைத்துக் கவிஞர்களுக்கும், இன மத பேதங்களுக்கு அப்பால் நின்று, களம் அமைத்து கை கொடுத்து வருவதை, பாராட்டத்தக்க ஒரு கைங்கரியமாகக் குறிப்பிட முடியும்.














