நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பான யோசனை குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கிய கலந்துரையாடல் சந்தர்ப்பத்திற்கமைய, சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.
மேல் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. இதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேச சட்ட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
இதனையடுத்து, குறித்த அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பான தமது நிலைப்பாட்டை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அண்மையில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தது.
மேலும், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உடனான சந்திப்பின்போதும், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் நேரடியாக கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
அதற்கமைய, குறித்த யோசனை தொடர்பில் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு வழங்கியுள்ளார்.









