பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) கவனம் செலுத்தியுள்ளது.
கோப் குழுவின் தலைவர் வைத்தியர் நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பல்கலைக்கழகத்தின் நிர்வாகம், நிதி முகாமைத்துவம், நிறுவன ஆளுகை, உள்ளகக் கணக்காய்வு, டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் டிஜிட்டல் கட்டமைப்புகளைப் பராமரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப மனிதவளம் பற்றாக்குறையாக உள்ளமை, திறமையான அதிகாரிகளைத் தக்கவைத்துக்கொள்வதில் காணப்படும் சிரமங்கள் மற்றும் மென்பொருள் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.இந்நிலையில், பல்கலைக்கழகத்துக்குள் நிரந்தரமானதும் நிபுணத்துவம் வாய்ந்ததுமான தொழில்நுட்பக் குழுவொன்றை உருவாக்குமாறு கோப் குழு வலியுறுத்தியது.
மேலும், ஒழுக்காற்று விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்தல் மற்றும் வெளிநாட்டுக் கல்விக்காக விடுமுறை பெற்ற பின்னர் பணிக்குத் திரும்பாத விரிவுரையாளர்களிடமிருந்து பிணைத் தொகைகளை மீளப் பெறுதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 2025ஆம் ஆண்டில் மாத்திரம் ரூ.201 மில்லியன் தொகை மீளப் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிணை ஒப்பந்தங்களை மீறும் விரிவுரையாளர்கள் தொடர்பில் அனைத்து அரச பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும் தேசிய கொள்கையொன்றை வகுக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை கோப் குழு வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், கணக்காய்வு மற்றும் குழுவின் பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்தி, பல்கலைக்கழகத்தின் ஆளுகை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அப்ரா அன்சார்









