this is. written by B H Abdul Hameed
write his name in Tamil !
உன்னையல்லால் யார் துடைப்பார்?
…….
தினம் ஒரு அஞ்சலிக் கவிதை எழுதும்
என் பேனாவை
அடுப்பில் வைத்து எரிக்க வேண்டும்
எல்லா இரவுகளும்
நிசப்தமானவைதான்
ஆனால் இந்த இரவின் நிசப்தம்
நாற்பதாயிரம் இசைத்தட்டுகள்
ஒரே நேரத்தில்நிறுத்தப்பட்ட
அச்சுறுத்தும் நிசப்தம்
எஸ்.ஜானகி இறந்த இந்த இரவு
மெளனத்தின் இருள் கடலுக்கு அடியில்
தேம்புகிறது
அகநானூறில்
தலைவனைப் பிரிந்து ஏங்கும்
தலைவிக்கு ஒரு குரல் இருந்திருக்குமே
அது எப்படி இருந்திருக்கும் என
பல நாள் யோசித்திருக்கிறேன்
‘ இதோ இப்படித்தான்’ என
‘ பொன் மேனி உருகுதே’யில்
அந்தக் குரலைக் காட்டினார் ஜானகி
அன்னக்கிளியைத் தேடி
தாபத்தின் ஆயிரம் ஜுவாலைகள்
எரிந்த குரலில்
எரியாத உடல்கள் என
எவரும் இல்லை
செந்தூரப் பூக்களும்
பூவரசம் பூக்களுமாய்
ஆயிரம் மலர்களாய்
மலர்ந்த குரல்
ஒரு அந்தியில் வாடி உதிர்ந்துவிட்டது
என் பால்யத்தின் கனவிற்கு
ஒரு குரல் இருந்தது
என் இளமையின் கனவிற்கு
ஒரு குரல் இருந்தது
என் இரகசிய வேட்கைக்கு
ஒரு குரல் இருந்தது
என் பிரிவின் கண்ணீருக்கு
ஒரு குரல் இருந்தது
என் மழைக்காலங்களுக்கு
ஒரு குரல் இருந்தது
அவை எல்லாமே
ஜானகியின் குரல்களாக இருந்தன
‘ மாதா உன் கோயிலில்
மணி தீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான்
பிள்ளைக்குக் காட்டினேன்’ என
ஜானகியின் குரல்
வால்வு ரேடியோவில் ஒலிக்கும்போதெல்லாம்
கால்கள் துவண்டிருந்த
என்னை மடியில் போட்டுக்கொண்டு
என் அம்மா மாலை மாலையாக
கண்ணீர் சிந்தினாள்
என் கண்ணீரைத் துடைக்க
யாருமில்லாத
இதே போன்ற ஒரு இரவில்தான்
‘ உன்னை நான் அறிவேன்
என்னையல்லால் யார் அறிவார்?’
என்ற ஜானகியின் குரல்
தலைகோதியது
இனி பனிக்காலங்கள் தொடங்குபோதெல்லாம்
‘ இது மார்கழித் திங்கள் அல்லவா?’
என ஜானகியின் குரலோடுதான்
குளிர் உள்ளே நுழையும்
‘ஒஹோ மேகம் வந்ததே’ பாட்டுக்கு
ரேவதி மழையில் நனைந்துகொண்டே
நடனமாடும்போது
அவர் மேல் பெய்த மழை
ஜானகியின் குரல்தான் எனத் தோன்றியது
எனக்கு மட்டும்தானா?
ஜானகியின் குரலோடு
ஆண் குரல்கள்
போட்டியிட்டு தத்தளித்தன
எஸ்.பி.பி மட்டும்
அந்தச் சவாலை சரி சமமாக
சந்தித்தார்
அந்தக் குரலின்நடனத்திற்கு
இணை நடனமாட முடியாமல்
நாயகிகள் தோற்றுக்கொண்டே இருந்தனர்
ஜானகியின் குரலுக்கு
ஒரு முகம் இருந்தது
அது ஆயிரம் உணர்சிகள்
தோன்றி மறையும் இசைமுகம்
ஆயினும்
உணர்ச்சியற்ற முகத்தோடுதான்
மேடைகளில் ஜானகி பாடினார்
கல்லில் உறைந்த தெய்வத்தின் குரல்
எப்படி பிரார்த்தனை வேளையில்
இதயத்தின் ஆழத்தில் கேட்குமோ
அப்படித்தான் ஜானகின் குரலும் கேட்டது
இந்த உலகில்
மென்மையானவை அனைத்தும் அழிந்து
வெறிக் கூச்சல்கள்
அதிகரித்துச் செல்கிறதே என்ற பதற்றம்
என்னை அமைதியிழக்கச் செய்கிறது
மிருதுவானவற்றின்
கடைசிக்குரலும் மறைந்துவிட்டது
மென்மையின் அரசி மறைந்துவிட்டாள்
இசையின் அரசி மறைந்துவிட்டாள்
எனினும்
அவள் பாடல்கள் இருக்கும்
அவளது சாம்பல் தூவிய இடத்தில்
பெரும் பசும்புல்வெளிபோல
என் மரணத்திற்குப் பின்னும் கேட்கும்
அதிகாலைக் குயிலோசை போல
11.7.2026
இரவு 10.28
மனுஷ்ய புத்திரன்









