பொதுமக்களிடையே விபத்துத் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 11 ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரம் 06.07.2026 முதல் ஆரம்பமாகவுள்ளது.
விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் ஆயிரக்கணக்கான இலங்கையர்களின் உயிர்கள் பறிபோவதையும், இலட்சக்கணக்கான மக்கள் காயங்கள் மற்றும் ஊனமுறுவதையும் கருத்திற்கொண்டு, பொதுமக்களிடையே விபத்துத் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, நாளை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இந்த விபத்துத் தடுப்பு வாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டின் அரசாங்க வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களில் கணிசமான சதவீதமானோர் அனர்த்தங்கள் காரணமாகவே சிகிச்சை பெற்று வருவதுடன், அவற்றில் தவறி விழுதல், வீதி விபத்துக்கள், பணியிட விபத்துக்கள், நீரில் மூழ்குதல் முதன்மை பெற்றுள்ளன.
சுகாதார சேவைக்கு மட்டுமன்றி, நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கும் விபத்துக்களினால் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப விழா நாளை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அமைச்சின் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றா நோய்ப் பிரிவு, தேசிய விபத்துத் தடுப்புக்கான ஆலோசனைக் குழுவின் வழிகாட்டலின் கீழ் ஒழுங்கமைக்கும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நாளும் ஒரு விசேட கருப்பொருளின் அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதன்படி, நாளைய தினம் ‘வீதி விபத்துக்களைத் தடுக்கும் தினம்’ எனவும், ஜூலை 07 ‘பணியிட விபத்துக்களைத் தடுக்கும் தினம்’, ஜூலை 08 ‘வீடுகள் மற்றும் முதியோர் இல்ல விபத்துக்களைத் தடுக்கும் தினம்’, ஜூலை 09 ‘நீரில் மூழ்குவதைத் தடுக்கும் தினம்’, ஜூலை 10 ‘பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையங்களில் விபத்துக்களைத் தடுக்கும் தினம்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளன.
இந்த வாரத்தில் நாடு தழுவிய ரீதியில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள், ஆபத்தான இடங்களை கண்டறியும் நடவடிக்கைகள், பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான நடைமுறை திட்டங்கள் மற்றும் விபத்துக்களைக் குறைப்பதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளைச் செயல்படுத்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அரச நிறுவனங்கள், சுகாதார நிறுவனங்கள், கல்வித் துறை, பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினரின் கூட்டுப் பங்களிப்புடன் இந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.








