புதிய தலைவரின் நியமனம் குறித்துத் தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் (NCW) அறிவிப்பு.
அரசியலமைப்பு சபையின் பரிந்துரையில், ஓய்வு பெற்ற தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம் அவர்கள் தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் தலைவராக மேதகு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் பெண்களின் உரிமைகளை மேம்படுத்தி, பாதுகாத்து, முன்னேற்றுவதற்கான சட்டபூர்வக் கட்டமைப்பை வழங்கும் தேசிய பெண்கள் ஆணைக்குழுவானது 2024ம் ஆண்டின் 37ம் இலக்க பெண்கள் வலுவூட்டல் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. பெண்களின் உரிமைகளையும் பாலின சமத்துவத்தையும் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பான ஆணைக் குழுவின் அதிகார வரம்பையும் செயல்பாடுகளையும் வரையறுக்கும் இச் சட்டத்தில், அத்தகைய உரிமைகள் மீறப்படுவது அல்லது நிகழக் கூடியது குறித்த விசாரணையும் உட்படுத்தப்படுகிறது.
2025 ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முறையாக நிறுவப்பட்ட ஆணைக்குழுவின் தற்போதைய செயல்பாட்டுப் பணியிலே அதன் நிறுவனக் கட்டமைப்பு, நிர்வாக மற்றும் நடைமுறை அமைப்புகளை மேம்படுத்துவதிலும், அதன் வினைத் திறனான செயல்பாட்டிற்குத் தேவையான மனித வளங்கள், பௌதீக மற்றும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டுக் கருவிகளை நிறுவுவதிலும் ஆணைக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
நேபாளம், நெதலாந்து, பெல்ஜியம் மற்றும் லக்சம்பேக் ஆகிய நாடுகளுக்கான தூதுவராகவும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதரகத் தலைவராகவும் பணியாற்றியுள்ள தலைவர் கிரேஸ் ஆசிர்வாதம் அவர்கள், பல்மட்ட ராஜதந்திர சேவையில் ஈடுபட்ட ஒரு சர்வதேச அரச பணியாளராக இரசாயன ஆயுதத் தடை அமைப்பில் (OPCW) பிரதி பணிப்பாளர் நாயகராகவும் பணியாற்றியுள்ளார்.
ஆணைக்குழு உறுப்பினர்களான ஷ்ரீன் சரூர், ஜனஹா செல்வராஜா, ஜயந்தி குரு-உற்றும்பல, கலாநிதி பத்மா குணரத்ன, கலாநிதி கலன சேனாரத்ன, எம்.யு. கயானி ஆகியோரும் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஸ்மேரி ஓல்காவும் தலைவருடன் இணைந்து செயற்படுகின்றனர். இவர்களது வழிகாட்டலில் ஆணைக்குழுவின் தற்போதைய செயல்பாட்டு நிலைப்பாட்டிலே இலங்கையில் பெண்களின் உரிமைகளையும் அவர்களது வலுவூட்டலையும் முன்னெடுத்துச் செல்வதில் முழுமையான செயல்பாட்டுத் தயார்நிலையை ஆணைக்குழு கொண்டிருப்பதையும் அவற்றைத் திறம்பட நிறைவேற்றுவதையும் உறுதி செய்யும் வகையிலும் ஆணைக்குழுவின் பணி முன்னெடுக்கப்படுகிறது.
தேசிய பெண்கள் ஆணைக்குழு
இலங்கை
01ம் திகதி ஜூன், 2026









