கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் மாகும்புரவிற்கும் இடையிலான சொகுசு பேருந்து சேவை 01.06.2026 முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தைப் பயன்படுத்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு மிகவும் செயல் திறன் மிக்க, வசதியான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை வழங்கும் நோக்கில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டலின் கீழ், விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் மற்றும் வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை ஆகியன இணைந்து இந்தச் சேவையை நடைமுறைப்படுத்துகின்றன.
பயணிகளுக்கு உயர்தர சேவையை வழங்கும் நோக்கில் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு விசேட பயிற்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், சேவையின் செயல்திறன் மற்றும் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சேவையின் மூலம் விமான நிலையத்திற்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் பயணிகளுக்கு மாகும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையத்திற்கும், அங்கிருந்து விமான நிலையத்திற்கும் வசதியான மற்றும் விரைவான போக்குவரத்து வசதிகள் கிடைக்கும்.
இதற்கான பயணக் கட்டணம் 410 ரூபா என்பதுடன், பயண நேரம் சுமார் 50 நிமிடங்கள் ஆகும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் பயணிகளுக்கு மாகும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையத்திற்கும், அங்கிருந்து விமான நிலையத்திற்கும் வசதியான மற்றும் விரைவான போக்குவரத்து வசதிகள் இச்சேவை மூலம் கிடைக்கும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
காலை 5.15 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் ஒருமுறை இந்த பேருந்து சேவை இயக்கப்படவுள்ளது.
இந்தச் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம், விமான நிலையத்திற்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் பயணிகளுக்கு மிகவும் வசதியான, நம்பகமான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், விமான நிலையத்திற்கும் பிரதான போக்குவரத்து மத்திய நிலையங்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதன் மூலம் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்கும் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சிக்கும் இது சாதகமான பங்களிப்பை வழங்கும் என அமைச்சு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.









