இஸ்மதுல் றஹுமான்
பல்கலைக் கழகங்களில் வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 400 மேற்பட்ட முஸ்லிம் மாணவர்களில் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் மாணவனும் இல்லாதது பெரும் கவலை என நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரி அதிபர் எம்.எப்.எம். ரிஸ்வான்
நீர்கொழும்பு “எக்கோ” (ECHO) அமைப்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைபரிசில் வழங்கும் நிகழ்வு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார்.
எக்கோ அமைப்பின் தலைவர் ஓய்வு நிலை அதிபர் எம்.எம்.எம். றிழுவான் தலைமையில் பெரியமுல்லை சவுன்டஸ் பெலஸ் மண்டபத்தில் நடைபெற்ற இவ் வைபவத்தில் விஷேட அதிதிகளாக அல் ஹிலால் மத்திய கல்லூரி அதிபர் எம்.எப்.எம். ரிஸ்வான், செய்லான் சர்வதேசம் பாடசாலை பணிப்பாளர் எம்.எச்.இசட்.எம்.எம். மர்சூக், வர்த்தக பிரமுகர்களான எம்.ஆர்.எம். றிப்ஸி, எம்.எம்.எம். அஸ்வத், எம்.எச். எம். சிஹான் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
அதிபர் ரிஸ்வான் தொடர்ந்து உரையாற்றுகையில் உயர் கல்விற்காக உதவி செய்யும் நிகழ்வில் கலந்துகொள்ளக் கிடைத்ததையிட்டு பெரிதும் மகிழ்ச்சியடைகிரேன். அதிகமான மாணவர்கள் உயர் தர பரீட்சையை முடித்துவிட்டு பல்கலைக்கழகம் செல்ல வசதி இல்லாமல் கஷ்டப்படுவதை அறிகிறோம். உண்மையிலேயே பல்கலைக் கழகம் செல்லும் மாணவர்களுக்கு உதவி செய்யும் இத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக உங்களை பாராட்டுகிறேன்.
நீர்கொழும்பு பிரதேசத்தில் பாடசாலைகளில் மனிதவள பற்றாககுறை அதிகரித்துள்ளது. அது முஸ்லிம் பாடசாலைகளில் மட்டுமன்றி சிங்களப் பாடசாலைகளிலும் இந்த நிலை கானப்படுவதை கல்விக் காரியாலயத்திற்குச்
சென்றால் உணரமுடிகின்றது.
விஷேடமாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை. சில பாடசாலைகளில் ஆசிரியர்களே அதிபர்களாக பதில் கடமையாற்றுகின்றனர்.
பல்கலைக் கழகங்களில் வைத்தியத் துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள முஸ்லிம் மாணவர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 400 மேற்பட்டவர்களைக் கொண்ட அந்தப் பட்டியலில் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் இல்லை என்பது கவலையளிக்கிறது.
நான் அறிந்த வகையில் கடந்த காலங்களில் மல்வானை, போரதொட்ட, திஹாரி பிரதேசங்களைச் சேர்ந்த நால்வர் வைத்தியதுறையில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா நகரில் மகளிர் பாடசாலை ஒன்றிலிருந்து 60 மேற்பட்டவர்கள் வைத்திய துறைக்குச் செல்கின்றனர். இக் கல்லூரியே உயர் தர பெறுபேற்றில் இலங்கையில் முன்னிலையில் உள்ளது. நாம் எங்கு இருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
பல்கலைக் கழகங்களில் கல்வி பயிலும் 56 மாணவர்களுக்கு எக்கோ நிறுவனம் பாரிய நிதி உதவி செய்கின்றது. உயர் தர விஞ்ஞானம் கற்பதற்கு மாதம் 30 ஆயிரம் ரூபா மட்டில் பெற்றார்கள் செலவிடுகின்றனர். பல்கலைக்கழக படிப்பிற்காக பெற்றார்களை எதிர்பார்க்க முடியாத நிலையில் சில மாணவர்கள் கடைகளில் வேலை செய்து கொண்டு தமது கல்வியை தொடர்கின்றனர். அவ்வாறு கடையில் வேலை செய்த வைத்திய துறை மாணவர் ஒருவரை எங்கோ அமைப்பு அடையாளம் கண்டு நிதி உதவி செய்துவருவதை அறிகிறேன்.
ஏனைய அமைப்புகளுடன் ஒப்பிடும் போது எக்கோ நிறுவனத்தை பார்க்கும் போது எனக்கு பொறாமை ஏற்படுகிறது. இதில் கல்விமான்கள், புத்திஜீவிகள், தனவந்தர்கள், சமூக ஆர்வளர்கள் என பல்வேறு தரப்பினரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் எமது பாடசாலையில் நடைபெறவுள்ள தேசிய மீலாத் விழாவை சிறப்பாக நடாத்த எம்முடன் உருதுனையாக இருக்குமாறு நான் எக்கோவுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கிறேன்.
மாணவர்களே இது ஒரு அமானிதம். சகல துறைகளுக்கும் மாணவர்கள் இங்கிருந்து உருவாக்கப்பட வேண்டும். நீங்கள் முன்மாதிரியாக இருந்து சமூகத்தில் நல்ல நிலைக்கு வர முயற்சிக்க வேண்டும். சமூகத்தை பயனுள்ளதாக மாற்றுவதற்கே இங்கு பணம் செலவழிக்கப்படுகின்றது. படிக்கும் நீங்கள் படித்த பாடசாலைகளுக்கும் உதவ முன்வர வேண்டும் என்றார்.
எக்கோ அமைப்பின் தலைவர் ஓய்வு நிலை அதிபர் எம்.எம்.எம். றிழுவான் உரையாற்றுகையில் முஸ்லிம் சமூகம் பாமர சமூகமாக இருக்க முடியாது.
எமது மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும், உலகளவில் வாழ்க்கை நடாத்துவதாக இருந்தாலும் சகலதையும் அறிந்துகொள்ள கல்வி அறிவு தேவை. உலகில் முஸ்லிம்கள் தான் சகல துறைகளிலும் வழிகாட்டியாக இருந்துள்ளனர். அதன் அடிப்படையில் நீர்கொழும்பு சமூகத்தையும் கல்வி சமூகமாக மாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் 2022 பெப்ரவரியில் எமது எக்கோ எனும் கல்வி கலாச்சர உதவி அமைப்பை ஆரம்பித்து புலமைபரிசில் நிதி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இதன் மூலம் இலங்கையின் பல பாகங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் கல்வி பயிலும் எமது பிரதேசத்தைச் சேர்ந்த 56 மாணவர்களுக்கு பல்கலைக் கழக கல்வி நடவடிக்கை முடியும் வரை மாதாந்தம் புலமைபரிசில் நிதி உதவியை வழங்கி வருகிறோம். இதில் 14 பேர் ஆண்கள், ஏனையவர்கள் பெண்களாவர். இது எமது பிரச்சினை மட்டுமல்ல ஏனைய சமூகங்களின் நிலையும் இதுதான்.
இந்த புலமைபரிசில் திட்டத்தின் அடிப்படையிலேயே எமது பிரதேச தனவந்தர்களின் பங்களிப்புடன் இம்முறையும் புலமைபரிசில் நிதி உதவியை வழங்கிவருகிறோம். ஒரு வீட்டிலிருந்து ஒரு பிள்ளையாவது பல்கலைக் கழகம் செல்ல வேண்டும் என்பதே எமது இலக்கு.
பல்கலைக் கழகம் என்பது பல கலாச்சாரங்களைக் கொண்ட இடம். அங்கு எமது மார்க்க, கலாச்சரங்களை பேனி ஏனைய சமூகத்துடன ஒன்றினைந்து செயல்பட வேண்டும். இங்கு தனியாக செயல்பட முடியாது.
எமது புலமைபரிசில் நிதி பெறும் சிங்கள பாடசாலையில் கல்விகற்ற ஒரு மாணவி புலமைபரிசிலுக்கு விண்ணப்பிக்கும் போது அல் குர்ஆனின் 20 ஜுஸுக்களை மனனம் செய்திருந்தார். நாம் எங்கு சென்றாலும் எமது ஈமானை பாதுகாத்து செயல்பட முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாகும் எனக்கு கூறினார்.
புலமைபரிசில் நிதி உதவி பெறும் மாணவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது இந்த நிதி உதவி எமது பல்கலைக்கழக தேவைகளுக்கு பெரிதும் உதவின. பல்கலைக்கழகத்திற்கு வெளியே தங்க வேண்டிய நிலை ஏற்பட்ட சந்தர்பங்களில் இந்த நீதிமூலமே வாடகை செலுத்தினோம் என பலர் கூறினர். மேலும் பல்கலைக்கழகம் செல்லும் எமக்கு உதவி செய்வதைப் போன்று பல்கலைக்கழகம் செல்வதற்காக உயர் தர படிக்க முடியாத சூழ்நிலையில் உள்ள மாணவர்களையும் இனம்கண்டு உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
கலந்து சிறப்பித்த விசேட அதிதிகள் மாணவர்களுக்கான புலமைபரிசில்களை வழங்கி வைத்தனர்.









