எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அலங்காரங்கள் மற்றும் தன்சல் வழங்கலின் போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மனிதர்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் பின்வரும் பொருட்களை விற்பனை செய்வது, காட்சிப்படுத்துவது அல்லது பயன்படுத்துவது அரசாங்கத்தினால் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
ஒருமுறை பயன்படுத்தும் பொருட்கள்: பிளாஸ்டிக் உறிஞ்சுக்குழாய்கள், கோப்பைகள், தட்டுகள், கரண்டிகள், முட்கரண்டிகள் மற்றும் கத்திகள்.
உணவுப் பொதியிடல்: ரெஜிபோர்ம், உணவுப் பெட்டிகள் மற்றும் லஞ்ச் சீட்.
அலங்காரப் பொருட்கள்: பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் அனைத்து வகையான பொலிஎத்திலீன் அல்லது பொலிபுரோப்பிலீன் அலங்காரப் பொருட்கள் ஆகிய பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
2017 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களின்படி, மதம் அல்லது கலாசார நிகழ்வுகளின் போது இத்தகைய பொருட்களைப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை எச்சரித்துள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் பின்வருமாறு விளக்கமளித்துள்ளனர்,
முறையாக அகற்றப்படாத கழிவுகள் நீர்நிலைகளை மாசுபடுத்துவதுடன், இவற்றை உட்கொள்ளும் விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
நுண் பிளாஸ்டிக் மனித உடலுக்குள் செல்வதால் பாரிய சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
பிளாஸ்டிக் கழிவுகளைத் திறந்தவெளியில் எரிப்பதன் மூலம் வளிமண்டலத்தில் நச்சு வாயுக்கள் கலக்கின்றன.
எனவே, பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக சுற்றாடல் நட்பு ரீதியிலான மாற்றீடுகளைப் பயன்படுத்துமாறும், சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் மக்காத கழிவுகளை முறையாக நிர்வகிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.









