எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன் பௌர்ணமி தினங்களை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் தானசாலைகளின் (தன்சல்களின்) உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சினால் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டுதல்களின் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதன்படி அனைத்து தன்சல்களும் பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவின் மட்டத்தில், அந்தந்தப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
பதிவின் போது தன்சல் நடத்தப்படும் இடம், அமைப்பாளரின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்ற அடிப்படைத் தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.
தன்சல்களை சுகாதாரமான முறையில் நடத்துவது குறித்து அமைப்பாளர்களுக்குத் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.
சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தன்சல்களைப் பரிசோதிக்கும் போது, 2011 ஆம் ஆண்டின் உணவு சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு இணங்க அவை செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
தன்சல் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரும், அது நிறைவடைந்த பின்னரும் பொது சுகாதாரப் பரிசோதகர் அந்த இடத்தைப் பார்வையிட்டு, சுற்றுச்சூழல் சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆரம்பம் முதல் இறுதி வரை முறையான கழிவு மேலாண்மைத் திட்டம் பின்பற்றப்பட வேண்டும்.
உணவு தயாரிப்பதற்கும் நுகர்வுக்கும் முடிந்தவரை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நீரைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
அவ்வாறு இயலாத பட்சத்தில், பாதுகாப்பான நீர் மூலங்களிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தன்சல்களில் உணவு உண்ணும் இடங்களில் கைகளைக் கழுவுவதற்கான நீர் வசதிகள் மற்றும் கை சுத்திகரிப்பான்கள் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
உணவு சமைக்கப்பட்டதிலிருந்து அது நுகரப்படும் நேரம் வரை 4 மணித்தியாலங்களுக்கு மேல் அதிகரிக்கக் கூடாது என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.










