அமெரிக்க – இஸ்ரேல் ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குப் பயணிப்பார்கள் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இன்று சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இஸ்லாமாபாத்தில் ஈரானிய பேச்சுவார்த்தையாளர்களுடன் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா எந்த அதிகாரிகளை அனுப்பும் என்ற விபரங்களை அவர் வெளியிடவில்லை.
கடந்த வார இறுதியில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான அமெரிக்கத் தூதுக்குழுவினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் உடன்பாடு எட்டப்படாமலேயே முடிவடைந்தன.
புதன்கிழமையுடன் முடிவடையும் இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தை, நேற்று ஹோர்முஸ் நீரிணையில் நடத்திய தாக்குதல் மூலம் ஈரான் மீறியுள்ளதாக டிரம்ப் தனது பதிவில் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்கா முன்வைக்கும் ஒப்பந்த விதிமுறைகளை ஈரான் ஏற்காவிட்டால், அந்நாட்டின் சிவில் உட்கட்டமைப்புகளை அழிக்கப்போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி அச்சுறுத்தியுள்ளார்.
நாங்கள் மிகவும் நியாயமான மற்றும் அறிவுபூர்வமான ஒப்பந்தத்தையே முன்வைக்கிறோம். அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இல்லையெனில், ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்தையும், ஒவ்வொரு பாலத்தையும் அமெரிக்கா தகர்க்கும் என்று டிரம்ப் தமது ட்ருத் சமூக தளத்தில் பதிவிட்டுள்ளார்.
புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் குறித்த டிரம்பின் கூற்று தொடர்பாக ஈரானிடமிருந்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.










