

( ஐ. ஏ. காதிர் கான் )
உலகின் முதல் பெண் பிரதமரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவியுமான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் 110 ஆவது ஆண்டு நிறைவு விழா, 17.04.2026 வெள்ளிக்கிழமை, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடந்தேறியது.
இவ்விசேட நினைவு நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, சிரேஷ்ட உப தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா (பா.உ.), கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
1916 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் திகதியன்று, இரத்தினபுரி நகரில் ஸ்ரீமாவோ ரத்வத்தே டயஸ் பண்டாரநாயக்க பிறந்தார். 1960 ஆம் ஆண்டு நடந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் போட்டியிட்டார்.
அதில் வெற்றி பெற்று பதவியேற்றதன் மூலம், “உலகின் முதல் பெண் பிரதமர்” என்ற வரலாற்றுப் பெருமையைச் சூட்டிக் கொண்டார்.
தனது நீண்ட அரசியல் அனுபவத்தின் மூலம், மூன்று முறை இலங்கையின் முதல் பெண் பிரதமராகவும் அத்தனகல்ல தொகுதியில் தடம் பதித்தார்.
தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும், பல்வேறு காத்திரமான கொள்கைகளை முன்னெடுத்து கடைபிடித்த சிறந்த தலைவியாகவும் அவர், வரலாற்றில் பேரும் புகழும் பெற்று இன்றும் போற்றப்படுகிறார்.









