தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையை கருத்திற் கொண்டு, அதற்கு முகங்கொடுக்கும் வகையில் 18.03.2026 முதல் மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த விடுமுறையானது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கும் பொருந்தும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
அதேபோல், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களுக்கும் இன்றைய தினம் விடுமுறை வழங்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது.
எவ்வாறாயினும், சுகாதாரம், துறைமுகம், நீர் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த விசேட விடுமுறை தினம் காரணமாக, இன்றைய தினம் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் ரயில்கள் மாத்திரமே இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பிரதான மார்க்கத்தில் 29 ரயில் பயணங்களும், வடக்கு மார்க்கத்தில் 17 பயணங்களும் மற்றும் கடலோர மார்க்கத்தில் 33 பயணங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், களனிவெளி மார்க்கத்தில் 5 பயணங்களும், புத்தளம் மார்க்கத்தில் 9 பயணங்களும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மார்க்கங்களில் 6 பயணங்களும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நாடு முழுவதும் வழக்கம்போல பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. பேருந்துகள் இயக்கப்படும் கால அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பயணிகளின் தேவைக்கேற்ப எந்த நேரத்திலும் பேருந்துகளை இயக்குவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அந்தப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.










