இஸ்மதுல் றஹுமான்
4 கோடி 59 இலட்சத்து 26 ஆயிரத்து 957 ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளை சட்ட விரோதமாக இலஙொகைக்குள் கொண்டுவந்த இலங்கை தனியார் விமான நிறுவனம் ஒன்றின் விமான பணிப் பெண் விமான நிலைய சுங்க அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளம் விமான பணிப் பெண்ணாவர்.
இவர் 4ம் திகதி அதிகாலை தான் பணிபுரியும் ‘பிட்ஸ் எயார்’ (FitsAir) நிறுவனத்திற்குச் சொந்தமான 8டீ-822 இலக்க விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேசம் விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இவர் விமான நிலைய வருகை முனையத்தின் விமான ஊழியர்கள் வெளியேறும் வழியால் தப்பிச் செல்லும் போது சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் அப் பெண் ஊழியரை நிறுத்தி அவரது பயணப் பொதியை பரிசோதித்துள்ளனர்.
அதில் 01 கிலோ கிராம் 163 கிராம் நிறையுடைய தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பெறுமதி 4 கோடி 59 இலட்சத்து 26 ஆயிரத்து 957 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் குறித்த விமானப் பணிப்பெண்ணைத் தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










