யாழ்ப்பாணத்தில் சிறுவன் ஒருவர் நேற்று (26) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் மீன் பிடிப்பதற்காக தனது சித்தப்பாவுடன் மண்டைத் தீவு கடலுக்குச் சென்றுள்ளார்.
களங்கண்டி முறையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த சிறுவனை சிறிது நேரம் காணாததால் அவரது சித்தப்பா கடலில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்
அப்போது சிறுவன் களங்கண்டி தடியைப் பிடித்தபடி மயக்க நிலையில் இருந்துள்ளார்.
சிறுவனை உடனடியாக படகில் ஏற்றி குருநகர் இறங்குதுறைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோதும் சிறிது நேரத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான திடீர் மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் ஒழுங்குப்படுத்திய நிலையில், உடற்கூற்று பரிசோதனையில் நீரில் மூழ்கியதில் உயிரிழப்பு ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனைக்கோட்டை, சாவல்கட்டு பகுதியைச் சேர்ந்த சிவரத்தினம் சந்தோஷ் எனும் 17 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.










