2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட முதலாவது குழு 01.05.2026 இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் ஜித்தாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.
இதனையொட்டி கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் விசேட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி மற்றும் இலங்கை ஹஜ் குழுவின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த முதலாவது பயணத்திற்காக சவூதியா ஏர்லைன்ஸ் விசேட விமானம் ஒன்றைப் பயன்படுத்தியிருந்தது.
எஸ்.வி.- 839 (SV-839) இலக்கத்தைக் கொண்ட அந்த விமானம் இன்று (01) இரவு 09.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஜித்தாவிற்குப் புறப்பட்டது.
2026 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்காக இலங்கை முஸ்லிம் சமூகத்திலிருந்து 3,500 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சவூதியா ஏர்லைன்ஸ் தவிர, கத்தார் ஏர்வேஸ் விமானங்கள் மூலமாகவும் சவூதி அரேபியாவின் மக்காவிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.









