நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சவால்களுக்குப் பயந்து ஓடாமல், அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டதால் இரண்டு வருடங்களின் பின்னர் நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான அரசியல் தலைமைத்துவத்தினால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதாகவும், எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுத்து நாட்டைப் பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டார்.
ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முதலீட்டில் கடுவெல, மாபிம பிரதேசத்தில் நிறுவப்பட்ட லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய எரிவாயு நிரப்பு நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சாகல ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் கருத்துத் தெரிவித்த சாகல ரத்நாயக்க கூறியதாவது:
”நிலையான அபிவிருத்தி மற்றும் பொதுமக்களின் தேவைகளை அதிகரிக்கும் நோக்கில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த எரிவாயு நிரப்பு நிலையத்தை லிட்ரோ நிறுவனம் நிர்மாணித்துள்ளது.இதன் மூலம் எரிவாயு சிலிண்டர் கொள்ளளவை 180 000 இனால் அதிகரிக்க நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. தினமும் 60,000 கேஸ் சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
லிட்ரோ நிறுவனத்தினால் இவ்வளவு நவீன தொழில்நுட்பத்துடனான நிலையமொன்றை உருவாக்க முடியும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்து பார்க்க முடியாது. லிட்ரோ நிறுவனத்திற்கு ஒரு மோசமான காலகட்டம் இருந்தது. கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. கேஸ் கொள்வனவு செய்வதற்கு மக்கள் வரிசையில் நின்றனர். அரசாங்கத்திடம் அந்நியச் செலாவணி இருக்கவில்லை. அரசிடம் பணமும் இருக்கவில்லை. இது போன்ற ஒரு கடினமான காலத்தை நாம் கடந்து வந்திருக்கிறோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமைத்துவத்தினால் வெளிநாடுகளில் இருந்து ஆதரவு கிடைத்தது.
முன்னர் லிட்ரோ நிறுவனம் அரசுக்கு சுமையாக இருந்தது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நிறுவனத்தின் முகாமைத்துவத்தை மாற்றியமைத்ததால் இன்று இந்நிறுவனம் இந்த நிலைக்கு வந்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் வெற்றியினால் உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 26 பில்லியன் ரூபா கடன் தொகையை ஆறு மாதங்களுக்குள் செலுத்த முடிந்தது. கடந்த வருடம் லிட்ரோ நிறுவனம் 3 பில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.
தற்போது மக்கள் வரிசையில் நிற்காமல் எரிவாயுவை பெற்றுக் கொள்கின்றனர். மிகவும் சவாலான காலகட்டத்தின் பின்னர் லிட்ரோ நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்லும் நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் உட்பட பணிப்பாளர் சபை, பணியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசு நிறுவனங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். அரச தொழில்முயற்சிகள் அரசுக்கு சுமையாக உள்ளன.
லிட்ரோ நிறுவனமும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. ஆனால் இன்று அது லாபகரமாக மாறிவிட்டது. ஒரு நாடாக, நாம் வேகமாக முன்னேற வேண்டும். நாடு வீழ்ச்சியடைந்த போது மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்தது.
சகல புள்ளிவிவரங்களையும் அவதானித்தால், ஒரு நாடாக நல்ல பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இரண்டு வருட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, முதன்மைக் கணக்கு இருப்பு உபரியாக மாறியுள்ளது. ரூபாயின் பெறுமதி வேகமாக வலுவடைந்து வருகிறது. நாடு நிலையானது மட்டுமல்ல, பணவீக்கமும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
எதிர்காலத்தில் மேலும் சவால்கள் உள்ளன.
அந்நியச் செலாவணியை மேலும் அதிகரிக்க சுற்றுலாத் திட்டங்களை மேலும் மேம்படுத்த வேண்டும். நமது துறைமுகங்களை விநியோக மையமாக உருவாக்க வேண்டும். உற்பத்தித் தொழில்கள் மூலம் நாம் மேலும் முன்னேற முடியும். மின்சாரத்தைக் கூட ஏற்றுமதி செய்யலாம். விவசாயத்துறையை முன்னேற்றலாம். இதுபோன்ற பல வாய்ப்புகள் உள்ளன. இதற்கு தேவையான மனித வளமும் நம்மிடம் உள்ளது.
லிட்ரோ நவீன உலகத்திற்கு ஏற்றவாறு செயற்படுகிறது. ஏனைய நிறுவனங்களும் இந்த வழியில் செயல்படலாம். அரசின் திட்டம் இருந்தாலும் இதற்கு அனைவரின் ஆதரவும் தேவை. நாட்டை மீட்க கடுமையான முடிவுகளை எடுத்தோம். எல்லோரும் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். பிரச்சினைகளை விட்டு ஓடாததால் நாடு இன்று நல்லதொரு நிலையை எட்டியுள்ளது. குறைகள் இருப்பின் ஆராய்ந்து சீர் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், பணிப்பாளர் சபை, ஊழியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.