அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர்நிறுத்தத்தை மீறியுள்ளதன் காரணமாக, ஹோர்முஸ் நீரிணையை திறக்க முடியாது என்று ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவினால் ஈரான் துறைமுகங்கள் முடக்கப்படுவது உலகப் பொருளாதாரத்தைப் பிணைக் கைதியாக வைத்திருப்பதற்குச் சமமானது என்று ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராகவே இருந்ததாகவும், ஆனால் அர்ப்பணிப்புகளை மீறுதல், தடைகளை ஏற்படுத்துதல் மற்றும் அச்சுறுத்தல் விடுத்தல் போன்றவை உண்மையான பேச்சுவார்த்தைக்குப் பெரும் தடையாக அமையும் என்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், ஈரானுடன் புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் அடுத்த 36 முதல் 72 மணித்தியாலங்களுக்குள் ஆரம்பமாக வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இராஜதந்திர முயற்சிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீட்டிக்க ஜனாதிபதி தீர்மானித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘நிவ்யோர்க் போஸ்ட்’ பத்திரிகை செய்தியின்படி, பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் முன்னெடுக்கப்படும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான பாதையை எட்டியுள்ளன. இது குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், “அது நடப்பதற்கு வாய்ப்புள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (22) முடிவடையவிருந்த போர்நிறுத்தத்தை, பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க நீடிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.









