வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக புலம்பெயரும் தொழிலாளர்களின் குடும்பங்களின் நலன்புரியையும், அவர்களின் பிள்ளைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட “இன்சா” (InSA – Integrated Systematic Approach for the Family Development of Migrant Workers) திட்டம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம், 2026 ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் தொழிலாளர்களின் குடும்பங்களின் நீண்டகால நிதி முகாமைத்துவம், சிறுவர் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, தொழிற்பயிற்சி, சிறுதொழில் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளை அடிப்படையாகக் கொண்டு குடும்ப அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்குவது இதன் பிரதான நோக்கமாகும்.
குறிப்பாக, 2 முதல் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் சந்தர்ப்பங்களில், அவர்கள் வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பிள்ளைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பில் முறையான திட்டமொன்றை தயாரிப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
அதேவேளை, இரண்டு வயதுக்குக் குறைந்த பிள்ளைகளைக் கொண்ட தாய்மார்கள் தொடர்பில் நடைமுறையில் உள்ள சட்ட மற்றும் நிர்வாக ஏற்பாடுகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
இதற்காக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதுடன், வெளிநாடு செல்வதற்கு முன்னர், வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் மற்றும் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிய பின்னர் என மூன்று கட்டங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் குடும்ப நலன்புரி தொடர்பான தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
பிள்ளைகளுக்காக தயாரிக்கப்படும் மாற்று பராமரிப்புத் திட்டங்கள் நடைமுறையில் சாத்தியமானவையா என்பதை உறுதி செய்தல், ஆபத்தான சூழ்நிலைகளை அடையாளம் காணுதல் மற்றும் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் விசேட பராமரிப்புத் திட்டங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் தலையீடு செய்யவுள்ளனர்.
மேலும், வெளிநாட்டிலிருந்து மீண்டும் நாடு திரும்பும் குடும்பங்களுக்கு குடும்ப உறவுகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட உளவியல் மற்றும் சமூக ஆதரவுகளை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதேச செயலக மட்டத்தில் “இன்சா குழுக்கள்” அமைக்கப்படவுள்ளதுடன், உதவிப் பிரதேச செயலாளரின் தலைமையில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய துறைசார் அதிகாரிகள் இணைந்து செயற்படவுள்ளனர்.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை தயாரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் அனைத்து தொழிலாளர்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.
சுற்றுலா விசா உள்ளிட்ட முறைசாரா வழிகளில் வெளிநாடு செல்லும் நபர்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ தரவுகள் இல்லாததால், அவர்களின் குடும்பங்களுக்கான நலன்புரி மற்றும் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே, வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் தொடர்பில் முறையான தரவுத்தொகுதியொன்றை பேணுவதன் அவசியமும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.
இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், மாவட்ட செயலாளர்கள் ஊடாக மாவட்ட மட்டத்தில் அதன் முன்னேற்றம் கண்காணிக்கப்படவுள்ளது. “இன்சா” திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை 2027 பெப்ரவரி மாதத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.









