இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் லெவன் எஸ்.தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர், இலங்கைக்கும் ரஷ்ய கூட்டமைப்பிற்கும் இடையில் பல தசாப்தங்களாக நிலவி வரும் சுமூகமான மற்றும் வலுவான நட்பு உறவுகளை நினைவு கூர்ந்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவது அடுத்த ஆண்டில் கொண்டாடப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு ரஷ்யா தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவிற்காக ஜகத் விக்ரமரத்ன தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பல்வேறு துறைகளில் ரஷ்ய கூட்டமைப்பு இலங்கைக்கு வழங்கியுள்ள பெறுமதிமிக்க பங்களிப்புகளும் இதன்போது பாராட்டப்பட்டன.
மேலும், இலங்கைத் தேயிலையின் முக்கிய இறக்குமதியாளர்களில் ஒன்றாக ரஷ்யா வகிக்கும் இடத்தை சபாநாயகர் பாராட்டியதுடன், எரிசக்தி துறையில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பு குறித்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ரஷ்ய தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுவாகக் காணப்படுவதாக வலியுறுத்தினார்.
இலங்கையிடமிருந்து கிடைத்த நீண்டகால நட்பு மற்றும் ஆதரவிற்காக சபாநாயகருக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
பாராளுமன்ற மட்டத்திலான உறவுகளை மேலும் மேம்படுத்துவதுடன், பல்வேறு துறைகளின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்ற வேலைத்திட்டங்களை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் தூதுவர் தனது அவதானத்தைச் செலுத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை, பாராளுமன்ற உறவுகள் மற்றும் பரிமாற்ற வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தி, இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.









