தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 13ஆவது புதிய தபால் நிலையம் யாழ்ப்பாணம், கைதடியில் இன்று (21) பொதுமக்களின் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நவீன வசதிகளுடன் 2.8 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கைதடி தபால் நிலையம், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
2025ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் புதிய தபால் நிலையக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட 60 கோடி ரூபாய் நிதியிலிருந்து இதற்கான கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கைதடி தபால் நிலையத்திற்கான அடிக்கல் 2025 செப்டெம்பர் 17ஆம் திகதி நாட்டப்பட்ட நிலையில், தற்போது அதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
தபால் நிலையத்திற்கான காணியை நன்கொடையாக வழங்கிய மறைந்த ஆறுமுகம் சூரியகுமாரனின் உருவம் பொறிக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட தபால் முத்திரையொன்று, அவரது மனைவி சூரியகுமாரன் தயாபரி மற்றும் மகன் சூரியகுமாரன் மயூரன் ஆகியோரிடம் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் வழங்கப்பட்டது.
கைதடி தபால் நிலையத்தின் ஊடாக மாதாந்தம் 10 இலட்சம் ரூபாய் வருமானத்தை ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன் மூலம் சுமார் 4,000 குடும்பங்கள் நேரடியாகவும், இரண்டு உப தபால் நிலையங்களின் ஊடாக 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்களும் சேவைகளைப் பெறவுள்ளனர்.
மேலும், பிரதேசத்தில் உள்ள 33 அரச நிறுவனங்கள், 7 ஹோட்டல்கள் மற்றும் 34 தனியார் நிறுவனங்களுக்கும் இந்த தபால் நிலையத்தின் சேவைகள் வழங்கப்படவுள்ளன.
தபால் நிலையங்கள் பாரம்பரியமாக வழங்கப்படும் தபால் முத்திரை விற்பனை மற்றும் கடிதப் பரிமாற்றம் போன்ற சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், நவீன தொழில்நுட்பத்துடன் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் பங்களிக்கக்கூடிய வகையில் வளர்ச்சியடைந்து வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வீடுகள் மற்றும் சிறு, நடுத்தர கைத்தொழில் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நாடளாவிய ரீதியில் விநியோகிப்பதற்கு தபால் சேவையின் நம்பகமான விநியோக வலையமைப்பை பயன்படுத்த முடியும் எனவும், இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தபால் சேவை முக்கிய பங்களிப்பை வழங்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.








