மோசடி செய்பவர்கள் மற்றும் ஹேக்கர்கள் பயனர்களை ஏமாற்றுவதையோ அல்லது அவர்களின் கணக்குகளைக் கைப்பற்றுவதையோ தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, WhatsApp தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
Meta நிறுவனத்திற்குச் சொந்தமான உடனடி செய்தியிடல் சேவையான WhatsApp-ஐ ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் Passkey வசதியுடன் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த வசதியின் மூலம், கடவுச்சொல் அல்லது PIN-ஐப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, கைரேகை, Face ID அல்லது சாதனத்தின் Screen Lock குறியீடு மூலம் பயனர்கள் தங்களது WhatsApp கணக்கில் மீண்டும் உள்நுழைய முடியும்.
ஏற்கனவே ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் Passkey-ஐ அமைத்துள்ளதாக WhatsApp தெரிவித்துள்ளது. மேலும், Android மற்றும் iOS சாதனங்களில் பயனர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட Passkey-களைச் சேர்த்துக்கொள்ள முடியும்.
இதனிடையே, WhatsApp-இன் Two-Step Verification வசதியும் மேம்படுத்தப்பட்டு, முழுமையான கடவுச்சொல் முறையாக மாற்றப்படுகிறது. இதில் எழுத்துகள், எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகளைப் பயன்படுத்துவதற்கும் ஆதரவு வழங்கப்படவுள்ளது.
மேலும், Android பயனர்கள் தங்களது தொடர்புப் பட்டியலில் இல்லாதவர்களிடமிருந்து அழைப்புகளைப் பெறும்போது, அந்த அழைப்பாளர்கள் தொடர்பான கூடுதல் தகவல்களைப் பார்க்க முடியும். குறிப்பாக, அந்தத் தொலைபேசி இலக்கம் எந்தப் பகுதியிலிருந்து அழைக்கப்படுகிறது என்பதையும், அழைப்பாளருடன் பொதுவான WhatsApp குழுக்கள் உள்ளனவா என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.
மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக WhatsApp தெரிவித்துள்ளது.
“WhatsApp-இல், உங்கள் உரையாடல்கள் உங்களுக்கும் நீங்கள் உரையாடும் நபர்களுக்கும் மட்டுமே சொந்தமானவை. அதனால்தான் End-to-End Encryption வசதியை இயல்புநிலையாக வழங்கியுள்ளோம். உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், அது தொடர்ந்து உங்கள் கட்டுப்பாட்டிலேயே இருப்பதை உறுதி செய்வதற்கும் புதிய வழிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறோம்” என WhatsApp தனது வலைப்பதிவு பதிவில் தெரிவித்துள்ளது.









