( ஐ. ஏ. காதிர் கான் )
தமிழக முதலமைச்சராக பதவியேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய்யிற்கு, ஹிஸ்புல்லாஹ் எம்பி மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். உங்களது முதல் தேர்தலிலேயே வலுவான மக்கள் ஆதரவைப் பெற்று, தனித்துவமான அரசியல் சக்தியாக உருவெடுத்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க சாதனையாகும். மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல் பயணத்தைத் தொடங்கும் இந்த முக்கிய தருணத்தில், உங்களுக்குத் தேவையான மன வலிமை, தெளிவான நோக்கம் மற்றும் தொடர்ந்த வெற்றிகள் கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“இலங்கை மற்றும் தமிழக மக்களுக்கிடையேயான வரலாற்று, மற்றும் மனிதாபிமான
உறவுகள் பல தசாப்தங்களாக வலுவாக இருந்து வருகின்றன. குறிப்பாக, இலங்கை எதிர் நோக்கிய பல்வேறு சவாலான கால கட்டங்களில், தமிழக அரசு மற்றும் அதன் மக்கள்
வழங்கிய ஆதரவும் ஒத்துழைப்பும்,எப்போதும் நினைவு கூரத்தக்கதாகும். இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினராக நான், இந்தியாவின் முக்கியமான மாநிலமான தமிழகத்தின் அரசியல் முன்னேற்றத்தைக் கவனமாகக் கண்காணித்து வருகின்றேன். அந்த வகையில், நீங்கள் உருவாக்கி வரும் புதிய அரசியல் பாதை, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஒன்றாக
அமையும் என்பதில் நம்பிக்கை உள்ளது. மேலும், உங்கள் தலைமையில் தமிழக அரசு இலங்கை மக்களுடன் கொண்டுள்ள நட்புறவை மேலும் வலுப்படுத்தி, இரு தரப்பினருக்கும்
பயனளிக்கும் பொருளாதார, கல்வி மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்புகளை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.
தமிழக மக்கள் உங்கள்மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில், நல்லாட்சியும் மக்கள் நலக் கொள்கைகளும் முன்னிலைப்படுத்தப்படும் என்பதில்
எனக்கு அதீத நம்பிக்கை உண்டு“ எனவும், அவர் மேலும் அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.










