டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதாகக் கூறப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினர் ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’, குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று (09) காலை 8.00 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கொண்ட ரஞ்சி’, இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது கடந்த ஜனவரி 09ஆம் திகதி டுபாயில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவருடன் அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் டுபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும் ‘கொண்ட ரஞ்சி’ பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது.









