இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை, ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார்.
பொதுவான வரலாறு மற்றும் கலாசார விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியா – இலங்கை இடையிலான பன்முக உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து அவர்கள் இடையே இதன்போது ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவின் ‘அண்டை நாட்டுக்கு முதலிடம்’ கொள்கையையும், இரு நாடுகளினதும் நலனுக்காக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பையும் இந்தியத் துணை ஜனாதிபதி இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இலங்கையில் இந்திய வீடமைப்புத் திட்டம் மற்றும் ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.










