கல்கமுவ, சியம்பலங்கமுவ பகுதியில் உயிரிழந்த ‘காவன்திஸ்ஸ’ யானையின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும், யானைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் குறித்த யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதே இக்குழுவின் முக்கிய நோக்கமாகும்.
முன்னாள் அமைச்சின் செயலாளர் ஏ.எச். சரத் விஜேசிங்க தலைமையிலான இக்குழுவில் பேராசிரியர் டி. சமிந்த பெர்னாண்டோ, பேராசிரியர் ஏ.ஜி. அனில் புஷ்பகுமார, பேராசிரியர் யூ.கே. காலிங்க பத்மலால், கலாநிதி ஜகத் குணவர்தன மற்றும் சட்டத்தரணி சரக ஜயரத்ன ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் டபிள்யூ.டபிள்யூ. ஹெரிசன் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயற்படுவார்.
காவன்திஸ்ஸ யானையின் மரணத்திற்கான சூழ்நிலைகள், அதற்குக் காரணமான உடனடி மற்றும் மறைமுகக் காரணிகள், சிகிச்சை நடவடிக்கைகளின்போது ஏதேனும் தவறுகள் அல்லது கவனக்குறைவுகள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பில் இக்குழு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
மேலும், காட்டு யானைகளின் நலனை உறுதிப்படுத்துவதற்கான உரிய செயற்பாட்டு நடைமுறையொன்றைத் தயாரித்தல் மற்றும் யானைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்தல் ஆகிய பொறுப்புகளும் இக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகள் மற்றும் பரிந்துரைகளைத் தயாரிக்கும் நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளவும் இக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கை, காட்டு யானைகளின் நலனுக்கான செயற்பாட்டு நடைமுறைக் கட்டமைப்பு மற்றும் யானைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பான பரிந்துரைகள் உள்ளடங்கிய முழுமையான அறிக்கையை 30 நாட்களுக்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.








