(ஏறாவூர் நிருபர் – நாஸர்)
1996 ஆம் ஆண்டு, தான் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் சவால்களை மட்டுமன்றி, பல்வேறு சதிகளையும் முறியடித்தே ஏறாவூரில் புதிய பாடசாலைகளை உருவாக்க முடிந்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
கடந்த சுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவி வந்த மரபுவழிக் கற்பித்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கம் கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி வருவது வரவேற்கத்தக்க முயற்சியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற முத்து விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் ஏ.ஏ. நாஸர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஏறாவூர் கல்விக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. எல். அபுல் ஹசன், கல்வித் திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், சமூகப் பிரமுகர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சுமார் முப்பது ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இப்பாடசாலையில் இதுவரை அதிபர்கள், ஆசிரியர்கள், தொண்டர் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களாகப் பணியாற்றிய அனைவரும் நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை இவ்விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது.
அத்துடன், புனரமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா திறப்பு, உள்ளகக் கற்றல்–கற்பித்தல் சுவர் ஓவியங்களின் திரைநீக்கம், கணிதக் கோபுரம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் திறப்பு, மாணவர் தலைவர்களுக்கும் வகுப்புத் தலைவர்களுக்கும் பதக்கங்கள் அணிவித்தல், சிறுவர் சுற்றாடல் கழகம், சுகாதாரக் கழகம் மற்றும் “கிளீன் ஸ்ரீலங்கா” மாணவர் இயக்கம் அறிமுகப்படுத்தல், மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், அதிதிகள், பிரமுகர்கள் மற்றும் புலமைப்பரிசில் மாணவர்களைக் கௌரவித்தல், மேலும் பாடசாலைக்கு ஸ்மார்ட் போர்டுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா, தற்போதைய அரசாங்கம் கல்வித் துறையில் புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவது பாராட்டத்தக்க முயற்சியாகும் என்றார். உலகின் முன்னேறிய நாடுகளின் கல்வி அனுபவங்களை ஒப்பிட்டு இச்சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படுவது சிறப்பான விடயமாகும் என்றும் குறிப்பிட்டார்.
இன்று உலகின் பல நாடுகள் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தை கல்வியில் பரவலாகப் பயன்படுத்தும் நிலைக்குச் சென்றுள்ள நிலையில், இலங்கை இன்னும் முழுமையாக மரபுவழிக் கற்றல்–கற்பித்தல் முறையிலேயே தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.
எனினும், தற்போதைய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாமல் அவற்றை நடைமுறைப்படுத்தியதால் நாட்டில் தேவையற்ற குழப்பநிலை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“எந்தத் துறையிலும் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமானாலும், அதனால் பாதிக்கப்படவோ பயனடையவோ இருக்கும் தரப்பினருக்கு முன்கூட்டியே தெளிவான விழிப்புணர்வு வழங்கப்படுவது இன்றியமையாததாகும். இல்லையேல் திடீரென அறிமுகப்படுத்தப்படும் முறைமை மாற்றங்கள் மக்களிடையே குழப்பத்தையும் எதிர்ப்பையும் உருவாக்கும்,” என்றார்.
மேலும், ஸ்மார்ட் போர்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது கல்விச் சீர்திருத்தத்தின் நோக்கம் மக்களுக்கு முன்கூட்டியே விளக்கப்படாத காரணத்தால், “தொலைக்காட்சியின்றி இனி கற்பித்தல் நடைபெறாது” என்ற தவறான எண்ணம் பலரிடமும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆகையால், பரந்தளவிலான மக்கள் விழிப்புணர்வுடன் இணைந்த கல்விச் சீர்திருத்தமே வெற்றிகரமாக அமையும் என்றார்.
இவ்வாண்டு தரம்–1 மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு, அடுத்த ஆண்டிலிருந்து தரம்–6 மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது வழக்கமாக இருந்தாலும், 1998 ஆம் ஆண்டு முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னரும் கல்வி முறை முழுமையாக மரபுவழியிலிருந்து விடுபடவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, கல்வித் துறையில் முழுமையான மாற்றம் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், அந்த மாற்றங்கள் வெற்றிகரமாக அமைய வேண்டுமெனில், அவற்றுடன் இணைந்த விரிவான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் கட்டாயம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா வலியுறுத்தினார்.









