ஊழல் தடுப்புச் சட்டத் திருத்தச் சட்டமூலத்துக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (19) சான்றுரையிட்டுள்ளார். இதன் மூலம் குறித்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இது 2026ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க ஊழல் தடுப்புத் (திருத்தச்) சட்டமாகச் சட்டமாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலம் 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் திகதி பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஒக்டோபர் 8ஆம் திகதி இடம்பெற்றதுடன், திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அடையாளம் காணப்பட்ட சட்டரீதியான, விளக்கமளித்தல் சார்ந்த, நிர்வாக மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே இந்தத் திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும்.
அத்துடன், சட்டத்தின் சிங்கள மற்றும் ஆங்கில மொழிப் பதிப்புகளுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீர்ப்பதோடு, ஊழல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடரும் நடவடிக்கைகளில் எதிர்கொள்ளப்படும் சவால்களையும் நிவர்த்தி செய்வது இதன் நோக்கமாகும்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) நிர்வாகச் செயற்பாடுகளை மேம்படுத்துவதும், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களை மையப்படுத்தப்பட்ட மின்னணு முறைமையின் ஊடாகச் சமர்ப்பிக்கும் நடைமுறையை இலகுபடுத்துவதும் இந்தத் திருத்தங்களின் மற்றுமொரு நோக்கமாகும்.
இந்தத் திருத்தங்கள் இலங்கையில் ஊழலுக்கு எதிரான சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டங்களைத் திறம்பட நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்தும் என நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.








