உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ‘எப்’ குழுவுக்கான லீக் ஆட்டத்தில் ஜப்பான் மற்றும் சுவீடன் அணிகள் மோதிய போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.
இன்று காலை 4.30 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடின.
இதனால் முதல் பாதி முழுவதும் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இடைவேளைக்குப் பிறகு தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய ஜப்பான், 56-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதற்கு பதிலடி கொடுத்த சுவீடன், 62-வது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தது.
அதன்பிறகு வெற்றிக்கான 2-வது கோலை அடிக்க இரு அணி வீரர்களும் கடுமையாக போராடினர்.
இருப்பினும் கடைசி வரை எந்த அணியாலும் கோல் அடிக்க முடியாமை போனதால், போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது.
இதேவேளை’எப்’ குழுவுக்கான லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி, துனிசியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் துனிசியா வீரர் எல்லீஸ் ஸ்கிரி தவறுதலாக ஓன் கோல் அடித்ததால் நெதர்லாந்து 1-0 என முன்னிலை பெற்றது.
அதன் பின்னர் 7-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் பிரையன் ப்ரோபி கோல் அடித்து அணியின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார்.
இதன்பிறகு இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், முதல் பாதியில் மேலும் கோல் எதுவும் பதிவாகவில்லை.
இரண்டாம் பாதியில் துனிசியா அணி தீவிரமாக தாக்குதல் நடத்த தொடங்கியது.
அதன் பலனாக 54-வது நிமிடத்தில் ஹசெம் மஸ்தூரி கோல் அடித்து அணிக்கான முதல் கோலை பதிவு செய்து, கோல் வித்தியாசத்தை 2-1 ஆக குறைத்தார்.
துனிசியாவின் பதிலடிக்கு பின்னர் மீண்டும் தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்த நெதர்லாந்து, 62-வது நிமிடத்தில் ஜோன் பால் வான் ஹெக்கே கோல் அடித்து முன்னிலையை 3-1 ஆக உயர்த்தியது.
மீதமுள்ள நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க போராடினாலும், மேலதிக கோல்கள் எதுவும் பதிவாகவில்லை. இறுதியில், நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது.









