வீடுகள் தகர்ப்பு, மாறிவரும் இராணுவ எல்லைகள், தாமதமாகும் படை விலகல்: சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியுமா என்ற நிச்சயமற்ற நிலையில் லெபனான் மக்கள்!
எழுதியவர்: ஜஸ்டின் சல்ஹானி (Justin Salhani)
Aljazeera
தமிழ்: அப்ரா அன்சார்
இஸ்ரேலின் இராணுவ ஆக்கிரமிப்பு, வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் அழிப்பு, மாறிவரும் இராணுவ எல்லைகள் ஆகியவற்றால் தெற்கு லெபனானில் இருந்து இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியுமா என்ற கேள்வியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள பகுதிகளை அடையாளப்படுத்துவதற்குப் பயன்படுத்தும் ‘மஞ்சள் கோடு’ (Yellow Line), தெற்கு லெபனானின் எதிர்காலத்தையும் அங்குள்ள மக்களின் வாழ்க்கையையும் பெரிதும் பாதித்து வருகின்றது.
இஸ்ரேலுடனான தெற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள லெபனானின் கியாம் (Khiam) கிராமத்தைச் சேர்ந்த அலி, கடந்த சில மாதங்களாக அங்கிருந்து சுமார் அரை மணித்தியாலப் பயணத் தொலைவில் வடகிழக்கே அமைந்துள்ள ஹஸ்பய்யா (Hasbaiyya) பகுதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளார்.
தெற்கு லெபனானின் பல்வேறு கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான மக்களில் அவரும் ஒருவர்.
“தெற்கு லெபனான் மக்கள் ஒரு துயரத்தை அனுபவித்து வருகின்றனர். தவறான முடிவுகளும் தோல்வியடைந்த அரசியல் நடவடிக்கைகளுமே இதற்குக் காரணம்” எனத் தனது முழுப் பெயரை வெளியிட விரும்பாத அலி, அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் லெபனானிலிருந்து படிப்படியாக வெளியேறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தக் கட்டமைப்பு எட்டப்பட்டது.
எனினும், இஸ்ரேல் தொடர்ந்து தெற்கு லெபனானின் பெரும்பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதுடன், அங்குள்ள பல கிராமங்களில் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகளை முறையாகத் தகர்த்து வருகின்றது.
லெபனானிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெறப்போவதில்லை என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் முன்னர் தெரிவித்திருந்தார்.
இது, தெற்கு லெபனானில் இஸ்ரேலின் முந்தைய ஆக்கிரமிப்பைப் போன்ற நீண்டகால இராணுவ இருப்பு தொடரக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் முந்தைய ஆக்கிரமிப்பு 22 ஆண்டுகள் நீடித்திருந்தது.
‘கடுமையான எல்லையாக’ மாறும் மஞ்சள் கோடு
லெபனானின் ஷியா முஸ்லிம் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா, கடந்த மார்ச் 2ஆம் திகதி இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியது. ஓராண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர் அந்தக் குழு இத்தகைய தாக்குதலை நடத்தியிருந்தது.
2024 நவம்பரில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தினசரி மீறி வருவதற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்தது.
அத்துடன், ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போரை ஆரம்பித்திருந்த நிலையில், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதற்கும் பதிலளிக்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு குறிப்பிட்டது.
இதற்குப் பதிலளித்த இஸ்ரேல், இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலப்பகுதியில் இரண்டாவது முறையாக லெபனான் மீதான தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது.
இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் தெற்கு லெபனானுக்குள் மீண்டும் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் காரணமாக 12 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஹிஸ்புல்லாவின் எதிர்ப்புக்கு மத்தியிலும், அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இஸ்ரேலிய அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை லெபனான் அரசாங்கம் ஆரம்பித்தது.
2023 ஒக்டோபர் முதல் இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹிஸ்புல்லா, 1980களில் லெபனான் பிரதேசத்தின் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்ப்பு இயக்கமாக உருவானது.
எனினும், லெபனான் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுத்ததுடன், அதன் விளைவாக இரு தரப்புக்கும் இடையில் ஒப்பந்தக் கட்டமைப்பு உருவானது.
இதன் ஒரு பகுதியாக, ‘முன்னோடிப் பகுதிகள்’ (Pilot Zones) எனப்படும் சில பிரதேசங்களை உருவாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
இந்தப் பகுதிகளிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறி, அவற்றின் பாதுகாப்புப் பொறுப்பை லெபனான் ஆயுதப் படைகள் ஏற்க வேண்டும். பின்னர், அப்பகுதிகளில் ஹிஸ்புல்லாவின் ஆயுதப் பிரசன்னத்தை அகற்றும் நடவடிக்கைகளையும் லெபனான் ஆயுதப் படைகள் முன்னெடுக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
தற்போது, தெற்கு லெபனானுக்குள் சுமார் 10 கிலோமீற்றர் வரை நீளும் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது.
இந்த ஆக்கிரமிப்புப் பகுதியின் முடிவைக் குறிக்கும் ‘மஞ்சள் கோட்டுக்குப்’ பின்னாலும், இஸ்ரேல் வீடுகளைத் திட்டமிட்டு வெடிவைத்துத் தகர்க்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
காசாவில் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள பகுதிகளைக் குறிப்பிடுவதற்கும் இதே ‘மஞ்சள் கோடு’ என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகின்றது.
“முன்னணிப் பகுதிகளில் அமைந்துள்ள பல கிராமங்களையும் நகரங்களையும் மக்கள் வசிக்க முடியாத இடங்களாக மாற்றி, அவற்றிலிருந்து மக்களை வெளியேற்றுவதே இஸ்ரேலின் முக்கிய நோக்கங்களாக இருந்தன. செய்மதிப் படங்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன” என நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட அரசியல் ஆய்வாளரும் தெற்கு லெபனானின் பின்த் ஜுபைல் (Bint Jbeil) பகுதியைச் சேர்ந்தவருமான மொஹமட் பாஸி, அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.
“காசாவில் பயன்படுத்தப்பட்ட அதே மாதிரியான அணுகுமுறையை லெபனானிலும் நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியாக இது அமைந்துள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கியாம் மற்றும் பின்த் ஜுபைல் உள்ளிட்ட சுமார் 50 முன்னணிக் கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
“முந்தைய ஆக்கிரமிப்புகளுடன் ஒப்பிடுகையில், இம்முறை இஸ்ரேலின் நோக்கம் அந்த நகரங்களிலும் கிராமங்களிலும் வசிக்கும் மக்களை வெளியேற்றி, அவர்களது வீடுகளையும் உட்கட்டமைப்புகளையும் முடிந்தவரை அழித்து, அவர்கள் மீண்டும் திரும்புவதை மிகவும் கடினமானதாக அல்லது சாத்தியமற்றதாக மாற்றுவதாகும்” என மொஹமட் பாஸி தெரிவித்துள்ளார்.
பல தடவைகள் போர்நிறுத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்ட போதிலும், நகரங்களின் பெரும்பாலான அழிவுகள் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னரே இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“மஞ்சள் கோடு என்பது படையினரின் பிரசன்னத்தையும் கிராமங்களைத் திட்டமிட்டுத் தகர்க்கும் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் கடுமையான எல்லையாகக் கருதப்படுகின்றது. போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும் இந்த அழிப்பு நடவடிக்கைகள் தடையின்றித் தொடர்கின்றன” என நெதர்லாந்தில் வசிக்கும் லெபனானியக் கட்டடக் கலைஞரும் திறந்த மூலத் தகவல் ஆய்வாளருமான அஹ்மத் பய்தூன் தெரிவித்துள்ளார்.
“போர்நிறுத்தம் லெபனானின் ஏனைய பகுதிகளுக்குப் பொருந்துகின்றது. ஆனால், இந்தப் பகுதிக்கு அது பொருந்தாததைப் போன்ற நிலை காணப்படுகின்றது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஞ்சள் கோட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சில கிராமங்களுக்குப் பொதுமக்கள் திரும்பியுள்ளனர். அவற்றில் முன்னோடிப் பகுதிகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த இரண்டு நகரங்களும் அடங்குகின்றன.
அவற்றில் ஒன்றான ஃப்ரூன் (Froun) நகரம், இஸ்ரேலிய இராணுவத்தின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களால் அழிக்கப்பட்டது. எனினும், இஸ்ரேலியப் படைகள் அந்த நகருக்குள் நுழையவில்லை.
“எமது நகரம் முன்னோடிப் பகுதிகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பதை அறிந்து நாங்கள் ஆச்சரியமடைந்தோம்” என ஃப்ரூன் நகரசபைத் தலைவர் ஹசன் பாஸி தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிறங்களில் இராணுவ எல்லைகள்
லெபனானில் இராணுவ எல்லைகளைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரே நிறம் மஞ்சள் அல்ல.
2000ஆம் ஆண்டில் தெற்கு லெபனானில் இஸ்ரேலின் நீண்டகால ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலியப் படைகள் பின்வாங்கிய எல்லையை அடையாளப்படுத்தும் வகையில் ‘நீலக் கோடு’ (Blue Line) உருவாக்கப்பட்டது.
தற்போது, ‘சாம்பல் கோடு’ (Grey Line) ஒன்றை உருவாக்குவது குறித்தும் இஸ்ரேலில் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தக் கோடு லெபனான் எல்லைக்குள் சுமார் நான்கு கிலோமீற்றர் வரை நீளக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சாம்பல் கோட்டுக்குப் பின்னால் உள்ள பகுதி மக்கள் வசிக்காத இடமாகப் பேணப்படும் எனக் கூறப்படுகின்றது. இதன் மூலம், இஸ்ரேலுக்குப் பாதுகாப்பு அரணாகச் செயல்படும் இடைத்தாங்கல் வலயமொன்று உருவாக்கப்படும்.
அந்தப் பகுதியில் லெபனான் பொதுமக்கள் தமது வீடுகளை மீண்டும் கட்டுவதற்கும் அனுமதி மறுக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
“சாம்பல் கோடு, நீலக் கோடு, மஞ்சள் கோடு எனப் பல்வேறு எல்லைகளைப் பயன்படுத்துவதன் மூலம், இஸ்ரேல் தரையில் உண்மையில் என்ன செய்துள்ளது என்பதை மறைப்பதற்கும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் முயற்சி செய்யப்படுகின்றது.
“லெபனானின் பரந்த நிலப்பரப்பிலிருந்து மக்களை வெளியேற்றி, அந்தப் பகுதிகளை மக்கள் வாழ முடியாத இடங்களாக மாற்றியுள்ள உண்மையை மறைப்பதே இதன் நோக்கமாகும்” என மொஹமட் பாஸி தெரிவித்துள்ளார்.
“இறுதியில், இந்தக் கோடுகளுக்கு என்ன பெயர்கள் வழங்கப்படுகின்றன என்பது முக்கியமல்ல. ஏனெனில், அவற்றின் எல்லைகள் அடிக்கடி மாற்றப்படுகின்றன. காசாவிலும் இதனை நாம் பார்த்துள்ளோம்.
“லெபனானின் பெரும் பகுதியை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதுடன், அங்குள்ள பகுதிகளை அழித்து, மக்களை வெளியேற்றியுள்ளது. பெரும்பாலும், இவை அனைத்தும் இடம்பெற்றபோது உலகம் அமைதியாகவே இருந்தது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதப் பிரிவினைகளைப் பயன்படுத்தும் உத்தி?
மஞ்சள் கோட்டின் இஸ்ரேலியக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளேயே சில கிராமங்களில் மக்கள் தொடர்ந்து வசித்து வருகின்றனர்.
லெபனானின் மதப் பிரிவினைகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்கான முயற்சியாக இது இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
தெற்கு லெபனானின் பெரும்பான்மையான மக்கள் ஷியா முஸ்லிம்களாக இருந்தாலும், ஷியா அல்லாத மக்கள் வசிக்கும் சில பகுதிகளின் அதிகாரிகள், இடம்பெயர்ந்த மக்களைத் தமது நகரங்களில் தங்கவைக்க வேண்டாம் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, தங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட மக்கள்கூட முழுமையான சுதந்திரத்துடன் வாழ முடியாத நிலை காணப்படுகின்றது.
“மஞ்சள் கோட்டுக்குள் மக்கள் தொடர்ந்து வசிக்க இஸ்ரேல் அனுமதித்துள்ள கிராமங்களில் பெரும்பாலானவை கிறிஸ்தவர்கள் மற்றும் சுன்னி முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளாகும்” என அஹ்மத் பய்தூன் தெரிவித்துள்ளார்.
“ஆனால், அங்கு தங்குவதற்கு அனுமதிக்கப்படுவது என்பது சுதந்திரமாக வாழ்வதற்குச் சமமானதல்ல.
“கஃபர்சூபா (Kfarchouba) பகுதியில் கிராமத்துக்கான நீரை இறைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நகரசபை ஊழியர்கள் கடத்தப்பட்டனர். நகரசபைத் தலைவரும் தடுத்து வைக்கப்பட்டார்.
“மஞ்சள் கோட்டுக்கு வெளியே அமைந்துள்ள டெய்ர் மிமாஸ் (Deir Mimas) கிராமத்தில் விவசாயிகள் தமது ஒலிவத் தோட்டங்களுக்குச் செல்வதற்கு வசதியாக லெபனான் இராணுவம் ஒரு காவல் நிலையத்தை அமைத்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையில், இஸ்ரேலிய டாங்கிகள் கிராமத்தின் நுழைவாயிலுக்கு வந்து அந்த நடவடிக்கையை எதிர்கொண்டன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தெற்கு லெபனானில் உருவாகியுள்ள இந்தப் புதிய நிலைமையை, மேற்குக் கரையில் இஸ்ரேல் முன்னெடுக்கும் ஆக்கிரமிப்புடன் ஒப்பிட்டு, ‘மேற்குக் கரைமயமாக்கல்’ (West Bankification) என அஹ்மத் பய்தூன் வர்ணித்துள்ளார்.
“மக்கள் தமது நிலங்களில் வசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், அவற்றைச் சுதந்திரமாகப் பயன்படுத்த முடியாது.
“வயல்களுக்குச் செல்வது சோதனைச் சாவடிகள், முன் அனுமதிகள் மற்றும் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபடும் படையினரின் முடிவுகளைப் பொறுத்துள்ளது. நகரசபை அதிகாரிகள் விரும்பிய நேரத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.
“ஒரு கிராமத்தை முழுமையாகக் காலி செய்யாமலேயே அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான ஓர் ஆட்சி முறையாக இது உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீண்டகால இடம்பெயர்வு அச்சம்
தெற்கு லெபனானில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு எதிர்வரும் காலங்களிலும் தொடரக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சில பகுதிகளில் தற்காலிகமாகத் தயாரிக்கப்பட்ட வீடுகளை அமைத்துக் கொடுக்க லெபனான் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
எனினும், உட்கட்டமைப்புகள் பரவலாகச் சேதமடைந்துள்ள அல்லது முற்றாக அழிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குடிநீர், மின்சாரம் மற்றும் கழிவுநீர் அகற்றல் போன்ற அடிப்படை அரச சேவைகளை வழங்குவது அரசாங்கத்துக்குப் பெரும் சவாலாக அமையலாம்.
இஸ்ரேலியப் படைகள் அங்கிருந்து வெளியேறினாலும், எல்லைப் பகுதிகளின் பெரும்பகுதி முற்றாக அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றது.
முன்னர் வீடுகளும் செழிப்பான விவசாய நிலங்களும் காணப்பட்ட இடங்களில் தற்போது தூசி, இடிபாடுகள் மற்றும் சாம்பல் மட்டுமே எஞ்சியுள்ளன.
“குறிப்பிடத்தக்க அளவில் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டால் சில நகரங்களுக்குத் திரும்புவது சாத்தியமாக இருக்கலாம். ஆனால், முன்னணிப் பகுதிகளில் உள்ள சுமார் 50 நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு குறுகிய அல்லது நடுத்தர காலப்பகுதியில் மக்கள் திரும்புவது சாத்தியமில்லை என நான் கருதுகின்றேன்” என மொஹமட் பாஸி தெரிவித்துள்ளார்.
தெற்கு லெபனானைச் சேர்ந்த பலருக்கு இந்த நிலைமை ஆறாத காயமாக மாறியுள்ளது.
தமது வீடுகளும் நிலங்களும் அழிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பின் கீழ் காணப்படும் நிலையில், அவர்கள் வேறு இடங்களில் தமது வாழ்க்கையைத் தொடர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இஸ்ரேலின் இராணுவ ஆக்கிரமிப்பு தெற்கு லெபனானின் எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்க்கையையும் மறுவடிவமைத்து வருவதாக அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
“கியாம் அழிக்கப்பட்டுவிட்டது. அங்கு எதுவுமே இல்லை. அடுத்த 10, 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு அங்கு மக்கள் வாழ்வது சாத்தியமற்றதாக இருக்கும்.
“அவர்கள் எங்களை மீண்டும் கற்காலத்துக்குத் தள்ளிவிட்டனர்” என இடம்பெயர்ந்துள்ள கியாம் கிராமத்தைச் சேர்ந்த அலி தெரிவித்துள்ளார்.









