அனைத்து அரச ஊழியர்களும் தங்களது அக்ரஹார (Agrahara) காப்புறுதி தரவுத்தளத்தை புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் ஜூலை 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இதற்கமைய, பயளாளிகள் அனைவரும் தங்களது விபரங்களை விரைவாக புதுப்பிக்குமாறு தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவர் கலாநிதி விஷாகா வனசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
ஓய்வூதியத்திற்கு தகுதிபெற்ற அரச மற்றும் மாகாண அரச சேவையைச் சேர்ந்த சுமார் 9 இலட்சம் பேர் இக்காப்புறுதியின் நேரடிப் பயளாளிகளாக உள்ளனர்.
அத்துடன், இவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து சுமார் 30 இலட்சம் பேர் இதன் கீழ் பயன் பெறுகின்றனர் என்றும் கலாநிதி விஷாகா வனசிங்க தெரிவித்துள்ளார்.
அக்ரஹார தரவுத்தளத்தை புதுப்பிக்கும் பணிகள் 2026 ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதுவரையில் சுமார் 6 இலட்சம் அரச ஊழியர்கள் தங்களது விபரங்களை இன்புதுப்புச் செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1900 அரச நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் அக்ரஹார காப்புறுதியில் உறுப்பினர்களாக உள்ளதாகவும், அந்த நிறுவனங்களின் அக்ரஹார ஒருங்கிணைப்பு அதிகாரிகளைப் பெயரிட்டு அனுப்புமாறு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் கலாநிதி விஷாகா வனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை அவ்வாறு அதிகாரிகளைப் பெயரிடாத நிறுவனங்களையும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்ட தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவர், அரச ஊழியர்கள் இந்த தரவுத்தளத்தில் உள்ளிடும் விபரங்களின் துல்லியத்தன்மையை அந்தந்த நிறுவனத்தின் அக்ரஹார விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியும் நிறுவனத் தலைவரும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், இதன் மூலமே இந்த தரவுத்தள திட்டத்தை வெற்றிகரமாக முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்றும் கூறினார்.
ஒவ்வொரு அரச நிறுவனமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட தலைவர், எதிர்காலத்தில் இந்த தரவுத்தளத்தின் ஊடாக மட்டுமே காப்புறுதிப் பயன்களை வழங்க எதிர்பார்ப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.









