அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கலில் டிஜிட்டல் அடையாள அட்டை முக்கிய திருப்புமுனையாகும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான நடவடிக்கையான ‘GovPay’ கட்டண வசதியை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் 07.02.2025 நடைபெற்ற இந்த நிகழ்வில், டிஜிட்டல் மயமாக்கல் ஒவ்வொரு நபருக்கும் ஒரு கலாச்சார வாழ்க்கையை வாழ இடமளிப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
“நமது நாட்டில் நாணயத் தாள்களின் பயன்பாட்டைக் குறைக்க நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். அதற்கு டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் முக்கியமானது. மக்களுக்கு மிக எளிதான அணுகலை உருவாக்க வேண்டும். இந்த GovPay தளம் அதில் மிகவும் வலுவானது. மக்கள் தெருக்களில் அலைந்து திரியும் வாழ்க்கையை விரும்பவில்லை. ஒவ்வொரு நபருக்கும் ஒரு கலாச்சார வாழ்க்கை தேவை. இதற்காக, நமது பொறுப்புகளை நிறைவேற்ற ஒரு குறிப்பிட்ட நேரமும்… உறங்குவதற்கு மற்றொரு குறிப்பிட்ட நேரமும் தேவை.”
“ஆனால் நமக்கு இருக்கும் பணிச்சுமை… இந்த நிலைக்கு வந்தவுடன், கலாச்சார வாழ்க்கைக்கு நமக்கு இடமில்லை.”
“குறித்த காலத்தை ஒதுக்கிக் கொள்வதற்கு டிஜிட்டல் மயமாக்கல் எங்களுக்கு வசதியைத் தருகிறது.”
“இந்த டிஜிட்டல் மயமாக்கல் பயிற்சியை நாம் வெற்றிகரமாக்க வேண்டும். இதன் முக்கிய திருப்புமுனை டிஜிட்டல் அடையாள அட்டையாகும். இது செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.”
“இந்த மாற்றங்கள் நமக்கு விரைவாகத் தேவை. டிஜிட்டல் மயமாக்கல் நம் நாட்டை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்லும்.”