ரயில்வே திணைக்களத்தின் இணையவழி பயணச்சீட்டு வழங்கும் முறைகேடுகளில் சில அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்தது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே திணைக்களத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், இந்த பயணச்சீட்டு மோசடி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கையிடவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலிக்கு அறிவித்துள்ளது.