இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தமது 82வது வயதில் காலமானார்.
தலையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்குச் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா 29.01.2025 காலமானார்.
இறுதிக் கிரியைகளை மாவிட்டபுரத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1989ஆம் ஆண்டு ஜூலை மாதம் தேசிய பட்டியல் ஊடாக அவர் நாடாளுமன்றுக்கு முதன்முறையாகத் தெரிவானார்.
பின்னர் 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.
அதற்குப் பின்னரான காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுவப்பட்டதுடன், இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் 2004, 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் அவர் நாடாளுமன்றுக்கு தெரிவானார்.
அதேநேரம், 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.