சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டப்படிப்புக்கு உள்நாட்டு மாணவர்களை அனுமதிக்கக்கூடாது என்ற தீர்மானம் அமுல்படுத்தப்படுவதை தடுக்க இடைக்காலத் தடை விதிக்க கோரி மாணவர்கள் குழு தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு தொடர்பில் முடிவொன்றை பெற முடியுமென இரு தரப்பினரின் சட்டத்தரணிகளும் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
இந்த மனு 07.07.2025 திங்கட்கிழமை பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ, மஹிந்த சமயவர்தன மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஹபில் பாரிஸ், வழக்கைத் தீர்த்து வைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
உள்நாட்டு மாணவர்கள் தொடர்புடைய பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் சேர அனுமதிக்கும் அறிவிப்பை பிரதிவாதிகள் வெளியிட்டுள்ளதாக சட்டத்தரணி குறிப்பிட்டார்.
அதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக தனது கட்சிக்காரர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ ஆலோசனையைப் பெற்ற பிறகு, சமர்ப்பணங்களை முன்வைக்க திகதியொன்றை வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கோரினார்.
இந்த கோரிக்கையை சட்டமா அதிபரின் சார்பாக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரனும் ஏற்றுக்கொண்டார்.
அதன்படி, இந்த மனுவைத் தீர்ப்பதற்கான எழுத்துப்பூர்வ அறிவுறுத்தல்களை சமர்ப்பிக்க மனுதாரர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி அழைக்குமாறு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
பாத்திமா அப்துல் பலீல் மற்றும் துலன்க டி சில்வா உள்ளிட்ட ஐந்து மாணவர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, பிரதிவாதிகளாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சனாதன சபை பெயரிடப்பட்டுள்ளது.
2025/26 கல்வியாண்டுக்காக சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற எதிர்பார்ப்பதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைவாக, உள்நாட்டு மாணவர்கள் பணம் செலுத்தி இந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டதாகவும், அதன்படி, தாங்களும் அதில் சேர நம்பிக்கையுடன் இருப்பதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, சமீபத்தில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்புக்காக வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் கேடட் அதிகாரிகளாக அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் தவிர, உள்நாட்டு மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற தீர்மானத்தை எடுத்துள்ளதாக பாராளுமன்றத்தில் அறிக்கை வெளியிட்டதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக இணையதளத்தில் உள்நாட்டு மாணவர்கள் மருத்துவ அறிவியல் பட்டப்படிப்பில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற எதிர்பார்த்தவர்களுக்கு இது பெரும் அநீதி என்பதால், இது அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டனர்.