இலங்கையின் தற்போதைய மின்சாரத் துறை மறுசீரமைப்புக்கள், நிதி ஸ்திரத்தன்மை, நிலைபேறான தன்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு என்பவற்றுடன் இணங்க வேண்டியதன் அவசரத் தேவையை எடுத்துக்காட்டும் வகையில் கட்டண முறை குறித்து அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் செலவு மீட்பு மற்றும் செலவுப் பிரதிபலிப்பு ஆகிய இரண்டும் வலுவான மற்றும் வெளிப்படையான மின்சாரத் துறைக்கு இன்றியமையாத கொள்கைகள் என கொள்கை வகுப்பாளர்களும் நிபுணர்களும் சுட்டிக்காட்டினர்.
IMF – நீடிக்கப்பட்ட நிதி வசதி (EEF) திட்டத்துடன் இணைந்தாக மின்சாரக் கட்டண முறையை மறுபரிசீலனை செய்வதற்காக IMF பணியாளர்களுடன் கலந்தாலோசிக்கும் வகையில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது இந்தக் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன.
2025 நவம்பர் இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டிய ஒரு முன்நிபந்தனை நடவடிக்கையாக இது பரிந்துரைக்கப்பட்டதால் திருமதி டெல்ஃபைன் பிரடி (FAD இன் சிரேஷ்ட பொருளாதார நிபுணர்) தலைமையிலான குழு, அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் இந்த ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தத் தொழில்நுட்ப ரீதியான கலந்துரையாடல் 2025 செப்டம்பர் 12 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் கபீர் ஹஷீம், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிமல் பாலிஹேன, (சட்டத்தரணி) சித்திரால் பெர்னாண்டோ, (சட்டத்தரணி) அஜித் பி. பெரேரா, திலின சமரகோன், திலித் ஜயவீர, சந்திம ஹெட்டியாராச்சி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது. வலுசக்தி அமைச்சு, நிதி அமைச்சு, இலங்கை மின்சார சபை (CEB),பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட பங்குதாரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
செலவு மீட்பானது சம்பந்தப்பட்ட துறை அதன் மொத்தச் செலவினங்களை ஈடுகட்டுவதை உறுதிசெவதன் மூலம் வினைத்திறனின்மைகளைத் தடுத்து, நவீனமயமாக்கலுக்குத் தேவையான முதலீடு மற்றும் கடன் ஈர்க்கப்படுவதை உறுதிப்படுத்துவதாகும் என கலந்துரையாடலின்போது குறிப்பிடப்பட்டது.
இதேவேளை, செலவுப் பிரதிபலிப்பு என்பது நுகர்வோர் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான உண்மையான செலவின் அடிப்படையில் பணம் செலுத்துவதை உறுதிசெய்து, நியாயமற்ற இடை – மானியங்களைக் குறைப்பதாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், செலவுகளை மீட்டெடுக்காவிட்டால், வினைத்திறன் இன்மைகள் பெருகி புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான வழிகள் இல்லாமல் போகும் என இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.
2030ஆம் ஆண்டுக்குள் 70% எனும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இலக்கு தொடர்பில் பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டதுடன், இதனை அடைவதற்கு இலங்கை சரியான உட்கட்டமைப்பு, நிதி மற்றும் ஊக்குவிப்புக் கட்டமைப்புகளை நிறுவ வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தினர். சூரிய சக்தி, நீர்மின்சக்தி மற்றும் காற்றாலை வலுசக்தி என்பவற்றை விரிவுபடுத்துவதுடன், களஞ்சிய மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன் இணைந்த முதலீடுகள் அத்தியாவசியமாகும் என சுட்டிக்காட்டப்பட்டது.
அனல் மின்சாரம் தொடர்ந்து ஒரு பங்கை வகித்தாலும், அது மிகவும் விலையுயர்ந்தது என்றும் உலகளாவிய விலை அதிர்ச்சிகளுக்கு உள்ளாகின்றமையால் மிகவும் நிலையற்றது என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உயர்ந்தளவிலான போட்டித்தன்மை வாய்ந்தது என்றும் ஆனால் அதற்கு முன்கூட்டிய முதலீட்டுத் தேவை காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.
நிலையற்ற உற்பத்திச் செலவுகள், நிதி ஸ்திரத்தன்மை மற்றும் நுகர்வோருக்கு அபாயங்களை ஏற்படுத்துகிறது என இங்கு எச்சரிக்கப்பட்டது. திடீர் செலவு அதிகரிப்புகள் வீட்டுத்துறை மற்றும் வணிகங்கள் மீது சுமத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கு துல்லியமான முன்னறிவிப்பு மற்றும் கவனமான திட்டமிடலின் தேவை இதன்போது வலியுறுத்தினர். இதனால் கட்டண முறையானது, செலவு மீட்பை மட்டுமல்லாமல், முன்னறிவிக்கக்கூடிய தன்மையையும் வழங்க வேண்டும் என்பதோடு செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழல் நட்பு ரீதியான உற்பத்திக்கு முதலீட்டை செலுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை, மறுசீரமைப்புகள் மனிதாபிமான ரீதியாக செயற்படுத்தப்பட வேண்டும் என்பதோடு, பாதிக்கப்படக்கூடிய வீட்டுத்துறையினரைப் பாதுகாப்பதற்கான இலக்கு வைக்கப்பட்ட மானியங்கள், மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் தொழிலாளர்களைப் பாதுகாப்பது மற்றும் செயற்திறன் வருமானங்கள் இறுதிப் பயனாளர்களுக்கு நியாயமான விளைவுகளை ஏற்படுத்துவதை உறுதி செய்வது என்பவற்றின் முக்கியத்துவத்தை கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துக்காட்டினர்.
தரவுகளின் ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மை, மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தங்களில் (PPAs)காணப்படும் இடைவெளிகள், முழுமையற்ற செலவு வகைப்படுத்தல்கள் மற்றும் பலவீனமான தகவல் கட்டமைப்புக்கள் தொடர்பிலும் கரிசனைகள் எழுப்பப்பட்டன. வலுவான நிர்வாகம் மற்றும் சுயாதீன ஒழுங்குமுறைபடுத்தல் இல்லாமல் ஒரு நவீன மற்றும் வினைத்திறனான கட்டண முறையை வெற்றிகரமாக அறிமுகப்படுத்த முடியாது என கலந்துரையாடலின்போது வலியுறுத்தப்பட்டது.
கட்டண மறுசீரமைப்பை முற்றிலும் ஒரு தொழில்நுட்ப ரீதியான செயற்பாடாக கருதக்கூடாது என்றும் இது நிதி ரீதியான ஸ்திரத்தன்மை கொண்ட மின்சாரத் துறையை ஏற்படுத்துதல், 2030ஆம் ஆண்டுக்குள் 70% எனும் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கு நிலைபேறான வகையில் மாறுவதை உறுதி செய்தல், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாத்தல் மற்றும் தொழிற்துறை முழுவதும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துதல் ஆகிய கொள்கை ரீதியான நோக்கங்களில் அடிப்படையாக இருக்க வேண்டும் என இதன்போது இணக்கம் காணப்பட்டது.