சுஐப்.எம்.காசிம்-
தெற்காசிய அரசியலில், தீர்மானிக்கும் சக்தியாக வளரத்துடிக்கும் இந்தியாவின் எதிர்பார்ப்புக்களால், ‘சார்க்’ அமைப்பின் சமநிலை, தளம்பலுக்குள் திணிக்கப்படுகிறது. மூன்றாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைக்க இந்துத்துவ சக்திகள் எடுக்கும் பிரயத்தனங்களில், அயல்நாடுகளின் அரசியலை அவதானிக்கும் நிலைமைகள் பிரதானமாகியுள்ளன. உள்நாட்டு விடயங்களில் கவர்ச்சிகரமான பிரசாரங்கள் இல்லாதுள்ளதால் சர்வதேச சாதனைகளைப் பிரச்சாரப்படுத்தவே பாரதீய ஜனதா தள கட்சி முயற்சிக்கிறது. ராகுல்காந்தி தலைமையிலான இந்திரா காங்கிரஸ் பாரதம் முழுவதும் நடத்தி வரும் பாதயாத்திரைகள், இந்துத்துவ சக்திகளை இடித்துரைத்துள்ளது. இதனால், ஏப்ரலில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை வெற்றிகொள்ளும் திட்டங்களில் மோடியின் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பங்களேதேஷ் ஆட்சியாளர்கள், இந்தியாவின் இந்துத்துவ கொள்கைக்கு எதிரானவர்களாக இருப்பதை பிரதமர் மோடி விரும்பவில்லை. இலங்கையிலும் இவ்வாறான ஒரு ஆட்சியையே ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிசத் போன்ற இந்து கடும்போக்கு அமைப்புகள் எதிர்பார்க்கின்றன. அயல் நாடுகளின் அரசியல் எதிரொலிகள் இந்தியாவுக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது. இவ்வாறு வரும் இடைஞ்சல்களை எதிர்கொண்டு, இந்து தேசியத்தை இந்தியாவில் வளர்க்க முடியாதென பாரதீய ஜனதா கட்சி கருதுகிறது. எண்பது வீதம் இந்துக்கள் வாழும் பாரதத்தில், ஹிந்தி மொழியை பிரதானமாகக் கொண்டுள்ள பெரும்பான்மை மாநிலங்கள் உள்ள இந்தியாவில், மதச்சார்பின்மை தேவைதானா! என்ற தோரணையிலேதான், பிரதமர் மோடியின் போக்குகளும் உள்ளன.
பிரித்தானியாவின் அடையாளங்களிலிருந்து முற்றாக விடுபடுவதாக அறிவித்த கையோடுதான், இந்திய மரபில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்றத்தை திறந்தது பி.ஜே.பி அரசாங்கம். இராமர் கோயில் திறப்பு விழாவை மிகக் கோலாகலமாக்கிய பிரதமர் மோடி, பாரதப் பெருமையின் பூர்வீக அடையாளமும் இந்துக் கலாசாரத்தின் நாகரீகமும் இதுதான் என்றார். இதனால், சந்திரயான் விண்கலத்தை நிலவில் இறக்கிய சாதனைக்கு நிகராக அயல் நாடுகள் எதையும் சாதிப்பதை பி.ஜே.பி. விரும்பவில்லை. கார்கில் யுத்தத்தை வென்ற பி.ஜே.பி. பிரதமர் வாஜ்பாயின் மவுசிலிருந்து உறுதியான கட்சியின் அத்திவாரம் மோடி வரைக்கும் “ஸ்ரோங்”ஆகவே உள்ளது. இந்த அத்திவாரம் ஆடாமலிருக்க அயல் நாடுகளின் அரசியலை ஆட்டுவிக்கிறது இந்துத்துவம்.
சர்வதேசப் புகழ் உள்ள ஒரு பிரதமர் பாகிஸ்தானில் இருப்பது, இந்தியாவின் சர்வதேச ராஜதந்திரங்களைப் பாதிக்கலாமென பி.ஜே.பி. கருதுகிறது. அந்நாட்டில் பலமிக்க பிரதமர்கள் இருந்த காலத்திலேதான் இந்தியாவுக்கு நெருக்குவாரங்கள் நிலவின. இதனால் பாகிஸ்தானுக்கு வேண்டாத அரசியலை பங்களாதேஷிலும், சர்வதேசத்துடன் நட்பில்லாத ஆட்சியை பாகிஸ்தானிலும் எதிர்பார்க்கிறது பாரதத்தின் இன்றைய அரசாங்கம். எதிர்வரும் ஏப்ரல் தேர்தல் வரும் வரைக்கும் இவ்விடயத்தில், இவ்வரசு விழிப்பாகவும் இருக்கும்.
நாலாவது முறையாகத் தொடர்ச்சியாக வெல்லுமளவுக்கு ஷேக் ஹஸீனாவின் அரசியல் சாதித்தவை எவை? ஆட்சிக்கு வந்த ஒரே தடவையில் (2018–2022) இம்ரான் கானை கவிழ்ப்பதற்கான காரணங்களைத் தேடுகையில், இந்தியாவின் தேவைகள் இவற்றில் இருப்பதாகவே தெரிகிறது. ராவல்பிண்டி நீதிமன்றத் தீர்ப்புக்களின் விளைவுகள், இம்மாதம் 08 இல் பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னரும் இப்படியொரு தீர்ப்புக்கு முகங்கொடுக்க நேர்ந்தது இம்ரானுக்கு. இவரைப் பதவி கவிழ்த்த கையோடு நடாத்தப்பட்ட மாகாணசபை தேர்தலில் இம்ரானின் கட்சியே அமோக வெற்றியீட்டியது. மக்களின் மன நிலைகளை அறிவதற்காக அவசரமாக நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகளால் ஆடிப்போன அரசாங்கம், அன்றிலிருந்தே இம்ரானை கருவறுக்கத் தொடங்கியது. இதனால், இம்ரானின் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டு, தேர்தலை எதிர்கொள்கிறது இக்கட்சி.
அரசின் கெடுபிடிகளுக்குப் பயந்துபோன இம்ரானின் கட்சியைச் சேர்ந்த பலர், சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி செய்வதால், ராஜதந்திரங்களை தவிர்த்து வேறென்ன வழிகளைக் கையாளலாமெனவும் இந்துத்துவம் சிந்திக்கலாம்.
இவற்றையெல்லாம் நன்கு அவதானித்து வருகிறது இந்திரா காங்கிரஸ் உள்ளிட்ட எதிரணிகள். இதனால், அரசியலுக்காக கடவுளையும் ஏமாற்றும் அரசியலை பி.ஜே.பி செய்வதாக தமிழக முதல்வர் கருத்து தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், இம்மாதம் 18இல் தமிழகம் வரவுள்ளார் பிரதமர் மோடி. திராவிடர்களின் அதிருப்தியைத் தணிப்பதற்காக, இராமர் கோவில் அனைவருக்குமான ஆலயமென முன்னாள் முதல்வர் பன்னீர்ச் செல்வம் அறிவித்துள்ளார். சார்க் நாடுகளின் கூட்டமைப்புக்குள் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கான அறிகுறிகள், பிராந்திய அரசியல் சமநிலையை பாதிக்கலாம்.










