இலங்கையில் பக்கவாத (Stroke) நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் பிரிவு பேராசிரியர் உதய ரணவக்க தெரிவித்துள்ளார்.
கடந்த தசாப்த காலத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததன் மூலம் இந்த அதிகரிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பக்கவாத சங்கத்தினால் நேற்று (26) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
“எமது பிராந்தியத்தில் நிலவும் பக்கவாத நோயின் போக்கை ஆராயும்போது, இலங்கையில் இதன் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுகிறது.
எமது கிராமங்கள் மற்றும் பிரதேசங்களில் வாழும் மக்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளின்படி, பத்துப் பேரில் ஒருவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பக்கவாத நோயாளர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான விசேட பக்கவாத சிகிச்சைப் பிரிவுகள் இலங்கையில் தற்போது சுமார் பத்து மாத்திரமே உள்ளன.
இதைவிடப் பெருமளவிலான சிகிச்சைப் பிரிவுகள் எமக்குத் தேவைப்படுகின்றன. குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிரதான வைத்தியசாலைகளில் தலா ஒரு சிகிச்சைப் பிரிவேனும் அமைக்கப்பட வேண்டும்.
அதேபோன்று, பக்கவாதத்துக்கு ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்துகளும் உள்ளன. எனினும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான வசதிகளைக் கொண்ட வைத்தியசாலைகள் இன்னும் குறைவாகவே உள்ளன.
இவை அனைத்தையும் நாம் மேம்படுத்த வேண்டும். வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கையிலும் பாரிய அதிகரிப்பு காணப்படுகிறது.
இலங்கையில் பதிவாகும் பக்கவாத நோயாளர்களில் சுமார் 75 சதவீதமானோருக்கு மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாகவே பக்கவாதம் ஏற்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.








