ஏ.எஸ்.எம். ஜாவித்
கொழும்பு:1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரப்படுவதைப் போன்று, 1990ஆம் ஆண்டு வடமாகாண முஸ்லிம்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பிலும் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என முஸ்லிம் புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1983ஆம் ஆண்டு கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கவும், தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் கோரி ஆளும் கட்சியின் அமைச்சர்கள் இருவர் உட்பட 51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
இலங்கை வரலாற்றில் மிக மோசமான சம்பவமாக வர்ணிக்கப்படும் 1983ஆம் ஆண்டு கலவரத்தின்போது ஏற்பட்ட உயிரிழப்புகள், சொத்துச் சேதங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்பட்ட உளவியல், சமூக ரீதியான பாதிப்புகளுக்கு நீதி கோரியே இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, 1990ஆம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் ஆயுத முனையில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டமை, காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை, ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு நாடு திரும்பிய நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் யாத்திரிகர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்களும் முஸ்லிம் சமூகத்தின் ஆறாத வடுக்களாக உள்ளன.
குறிப்பாக, குருக்கள்மடம் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைச் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு துயரச் சம்பவங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என்ற கவலை தொடர்கிறது.
36 ஆண்டுகளாக நீடிக்கும் அகதி வாழ்க்கை
எந்தவிதமான குற்றங்களையும் இழைக்காத வடமாகாண முஸ்லிம் மக்கள் சில மணி நேரங்களுக்குள் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டமை வரலாற்றில் மறக்கவோ மன்னிக்கவோ முடியாத குற்றமாகும்.
2026ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் இந்த வெளியேற்றம் இடம்பெற்று 36 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களில் பெருமளவானோர் இதுவரை முழுமையான மீள்குடியேற்றத்தைப் பெறாமல் வடமாகாணத்திற்கு வெளியே பல்வேறு மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, புத்தளம் மற்றும் கற்பிட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவான மக்கள் 10 பேர்ச்சர்ஸ் காணிகளில் சிறிய வீடுகளை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
1983ஆம் ஆண்டு கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி, நியாயம் மற்றும் இழப்பீடு கோரப்படுவதைப் போன்று, எந்தவிதமான குற்றங்களையும் இழைக்காத வடமாகாண முஸ்லிம் மக்களுக்கும் நீதி, நியாயம் மற்றும் உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என அந்த மக்கள் 36 ஆண்டுகளாக ஏங்கித் தவிக்கின்றனர்.
முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீது மக்கள் அதிருப்தி
ஏனைய சமூகங்களின் அரசியல் மற்றும் சமயத் தலைமைகளிடம் காணப்படும் சமூக, இன உணர்வுகள் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைமைகளிடம் காணப்படுவதில்லை என வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
முஸ்லிம்களின் சமயத் தலைமைகள் எனக் கூறிக்கொள்ளும் அமைப்புகளுக்கும் வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் குரல் கொடுப்பதற்கான துணிச்சல் இல்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை தொடர்பில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துள்ள தீர்மானம் தமிழ் மக்களுக்கு ஓரளவு மகிழ்ச்சியளிக்கும் விடயமாக அமைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் தொடர்பில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வித அக்கறையும் வெளிப்படுத்தாதிருப்பது முஸ்லிம் மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
வடமாகாண முஸ்லிம்கள் பல உயிர்களை இழந்ததுடன், தமது ஒட்டுமொத்த உடமைகள், காணிகள், வீடுகள், சமூக மற்றும் சமய உணர்வுகள் மட்டுமன்றி கல்வியையும் இழந்து தத்தளித்தனர்.
ஒரு காலத்தில் நெருக்கமான உறவுகளுடன் வாழ்ந்த தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உறவுகளும் இந்தச் சம்பவங்களால் சின்னாபின்னமாக்கப்பட்டன.
வடமாகாண முஸ்லிம்கள் உடல் மற்றும் உள ரீதியாக இன்றுவரை பாதிக்கப்பட்டு, பல்வேறு கவலைகளுடன் வாழ்ந்து வருகின்றனர் என்பதே யதார்த்தமான உண்மையாகும்.
ஜனாதிபதியிடம் நீதி கோரிக்கை
வடமாகாண முஸ்லிம்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இனியும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைமைகள் மற்றும் சமய அமைப்புகளை நம்புவதற்குத் தயாராக இல்லை எனத் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், 36 ஆண்டுகளாக அகதிகளாகவும், ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் வாழ்ந்து வரும் வடமாகாண முஸ்லிம் மக்களுக்கு நீதி, நியாயம் மற்றும் உரிய இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், 1990ஆம் ஆண்டு வடமாகாண முஸ்லிம்களின் வலுக்கட்டாய வெளியேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படுகொலைகள் உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்க விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.













