அப்ரா அன்சார்
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இன்று (20) நடைபெற்ற ஒருநாள் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில், இங்கிலாந்து அணியை 87 ஓட்டங்களால் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
303 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 38.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய போதிலும், இறுதிக்கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக, கடைசி ஏழு விக்கெட்டுகளையும் வெறும் 50 ஓட்டங்களுக்குள் இழந்தமை அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அரபாத் மின்ஹாஸ் 40 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வரிசையைச் சிதறடித்தார். அத்துடன், தனது முதலாவது ஒருநாள் சர்வதேச அரைச்சதத்தையும் பதிவு செய்தார். இந்தச் சிறப்பான ஆட்டத்திற்காக ஆட்டநாயகன் விருதையும் அவர் பெற்றுக்கொண்டார்.

ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து!
303 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, முதல் விக்கெட்டுக்காக பென் டக்கெட் மற்றும் டொம் பென்டன் இணைந்து 91 ஓட்டங்களைப் பெற்றதால் வலுவான நிலையில் காணப்பட்டது.
பென் டக்கெட் 46 பந்துகளில் 45 ஓட்டங்களையும், டொம் பென்டன் 53 பந்துகளில் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.
எனினும், டக்கெட்டின் விக்கெட்டை ஹரிஸ் ரவூப் வீழ்த்தியதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் தடுமாறத் தொடங்கியது.
டொம் பென்டனை அரபாத் மின்ஹாஸ் ஆட்டமிழக்கச் செய்ததுடன், இங்கிலாந்து அணித்தலைவர் ஹரி புரூக்கையும் 5 ஓட்டங்களுடன் வெளியேற்றினார்.
இதனையடுத்து, ஜோ ரூட் 35 பந்துகளில் 33 ஓட்டங்களையும், சாம் கரன் 39 பந்துகளில் 27 ஓட்டங்களையும் பெற்றனர். எனினும், இந்த இணைப்பாட்டத்தால் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல முடியவில்லை.
இறுதிக்கட்டத்தில் அரபாத் மின்ஹாஸ் தொடர்ந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், கஸ் அட்கின்சனை ரன் அவுட் செய்தும் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
அரபாத் மின்ஹாஸின் அபார பந்துவீச்சுக்கு ஹரிஸ் ரவூப் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சிறந்த ஒத்துழைப்பை வழங்கினார்.
பாகிஸ்தானின் அதிரடித் துடுப்பாட்டம்!

இதற்கு முன்னதாக, நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பாகிஸ்தான் அணிக்கு அழைப்பு விடுத்தது.
ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணி தடுமாறியதுடன், 81 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
எனினும், ஹசன் நவாஸ் 74 பந்துகளில் 79 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வலுச்சேர்த்தார். அவரது ஆட்டத்தில் ஒன்பது பவுண்டரிகள் அடங்கின.
அரபாத் மின்ஹாஸ் 58 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பெற்றதுடன், ஃபஹீம் அஷ்ரப் 26 பந்துகளில் 39 ஓட்டங்களை அதிரடியாகக் குவித்தார்.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றது.
இங்கிலாந்து அணியின் சார்பில் சோனி பேக்கர் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அடுத்த போட்டியில் இலங்கையை எதிர்கொள்ளும் இங்கிலாந்து!
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய மூன்று அணிகளும் தலா இருமுறை ஒன்றையொன்று எதிர்கொள்ளவுள்ளன.
தொடரின் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள், எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி லாகூரில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
இந்நிலையில், இங்கிலாந்து அணி தனது அடுத்த போட்டியில் எதிர்வரும் வியாழக்கிழமை (22) ராவல்பிண்டியில் இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ளது.







