2019ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாகச் செயற்பட்டு வரும் Zaviya Veterans FC அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள ‘Zaviya Legends Trophy 2026’ கால்பந்துத் தொடரின் உத்தியோகபூர்வ குழுக்கள் பிரிப்பு நிகழ்வு ஒக்டோபர் 18ஆம் திகதி நடைபெற்றது.
கொழும்பு 10, ஃபைஸ் மன்ஸில் மண்டபத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வு, அமைப்பின் தலைவர் என்.எம்.எம். நஸார், முகாமையாளர் ஏ.ஆர்.எம். யூனுஸ் மற்றும் செயலாளர் எம்.எஸ்.ஒய்.எம். ஜைன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
Zaviya Veterans FC அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் இக்கால்பந்துத் தொடர், அப்பகுதி விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் அணிகளின் குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை தொடர்பான விவரங்களை வெளியிடுவதற்காக இந்தக் குழுக்கள் பிரிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
பொரளை காம்ப்பெல் பூங்காவில் கால்பந்துப் போட்டிகள்!
இத்தொடரின் போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதி கொழும்பு பொரளை காம்ப்பெல் பூங்கா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளன.
24 அணிகள் பங்கேற்கும் இத்தொடர், வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதுடன், கால்பந்து ரசிகர்களுக்கும் விறுவிறுப்பான போட்டிகளைக் காணும் சந்தர்ப்பத்தை வழங்கவுள்ளது.
கொழும்பில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்தொடர் தொடர்பில் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
— ஏ.எஸ்.எம். ஜாவித்










