நாட்டின் பல பகுதிகளிலும் இன்ஃபுளுவென்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும், இதுகுறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என தொற்றுநோயியல் பிரிவின் பிரதான தொற்றுநோயியல் நிபுணரும் விசேட வைத்தியருமான பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது கண்காணிப்பு அமைப்பின் ஊடாக கடந்த 3 முதல் 4 வாரங்களாக இன்ஃபுளுவென்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.
கடந்த வாரத்தில் பெறப்பட்ட மாதிரிகளில் சுமார் 35 சதவீதமானவை இன்ஃபுளுவென்சா தொற்றுக்குள்ளானவர்களிடமிருந்து பெறப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.
அதாவது, இக்காலப்பகுதியில் பரவி வரும் இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் இன்ஃபுளுவென்சா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
எனினும், முறையான சிகிச்சையின் மூலம் இந்நோயிலிருந்து 3 முதல் 4 நாட்களுக்குள் பாரிய சிக்கல்களின்றி குணமடைய முடியும். எனவே, இதுகுறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை.
அதேவேளை, கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய் போன்ற தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்ஃபுளுவென்சா தொற்றினால் சில சந்தர்ப்பங்களில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். எனவே, இவர்கள் இவ்விடயத்தில் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும்” என்றார்.
மேலும், இன்ஃபுளுவென்சா நோய்த்தொற்று பரவும் விதம் மற்றும் அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர்,
“இந்நோயானது இருமல் மற்றும் தும்மலின்போது வெளியேறும் நீர்த்துளிகள் ஊடாகப் பரவுகிறது. அதுமாத்திரமன்றி, தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகொள்வதன் மூலமாகவும் நோய் பரவக்கூடும்.
எனவே, இந்நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
இன்ஃபுளுவென்சா தொற்றுக்குள்ளானவர்கள் 2 முதல் 3 நாட்கள் வீட்டில் தங்கி ஓய்வெடுப்பது அவசியமாகும். மேலும், சவர்க்காரம் பயன்படுத்தி அடிக்கடி கைகளைக் கழுவுதல் மற்றும் நோய்த்தொற்றுக்குள்ளானவர்கள் முகக்கவசம் அணிதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்” என்றார்.








