கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், OpenAI நிறுவனத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ChatGPT-ஐ தான் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை ஆராய்ந்து, அதில் பயனுள்ளதாகக் கண்டறியும் விடயங்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகப் பதிவொன்றில் இதனைத் தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், ChatGPT தனது ஆர்வத்தையும் புதிய விடயங்களை அறிந்துகொள்ளும் ஆர்வத்தையும் தூண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குடும்பப் பயணத்தைத் திட்டமிடுவது உள்ளிட்ட நடைமுறைத் தேவைகளுக்கும் ChatGPT உதவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“ChatGPT மூலம் மேலும் என்ன செய்ய முடியும் என்பதை அறிந்துகொள்ளவும், எனக்கு பயனுள்ளதாக இருப்பவற்றைப் பகிர்ந்துகொள்ளவும், தங்களுக்கு ஆர்வமுள்ள விடயங்களில் ChatGPT-ஐ முயற்சித்துப் பார்க்க மேலும் பலரை ஊக்குவிக்கவும் எதிர்பார்த்திருக்கிறேன்” என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டாண்மையின் மூலம் சில சுவாரஸ்யமான விடயங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அது தொடர்பான மேலதிக விவரங்களை அவர் வெளியிடவில்லை.







