இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி / பால் பொன்னி அரிசியை அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த ரத்மலானை பல்பொருள் அங்காடிக்கு ரூ.5 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரத்மலானை காலி வீதியில் இயங்கி வரும் பெல்டா சுப்பர் மார்ட் (Belta Super Mart) பல்பொருள் அங்காடியை நடத்தும் Beliatta Exim Holdings (Pvt) Ltd நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை, கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை கிலோகிராம் ஒன்றுக்கு ரூ.255 ஆக இருந்த நிலையில், குறித்த பல்பொருள் அங்காடியில் ஒரு கிலோகிராம் கீரி பொன்னி / பால் பொன்னி அரிசி ரூ.270க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கிலோகிராம் ஒன்றுக்கு ரூ.15 அதிகமாக அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டை நிறுவனம் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, கல்கிசை நீதவான் நீதிமன்றம் ரூ.5 இலட்சம் அபராதம் விதித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அல்லது பால் பொன்னி GR 11 அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை கிலோகிராம் ஒன்றுக்கு ரூ.255 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.








