மதத் தலைவரொருவரை அவமதித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சவுதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கை இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த அம்பாறைப் பகுதியைச் சேர்ந்த சிவராசா அனுஜன் என்ற இளைஞர், மதத் தலைவரை அவமதித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இரா,சாணக்கியன், அந்நாட்டு அரசாங்கத்தின் தலையீட்டுடன் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் போது அந்த தண்டனை மரண தண்டனையாக தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதனிடையே, தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனுஜனின் தாயார், தனது மகனை மரண தண்டனையிலிருந்து மீட்டுத் தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தாயார்,
“என் மகன் தவறு செய்துவிட்டான் தான். அதற்கு மன்னிப்பு வழங்கி என் மகனை என்னிடம் ஒப்படையுங்கள். மிகவும் கஷ்டப்பட்டே நான் என் மகனை வளர்த்தெடுத்தேன். ஜனாதிபதி அவர்களே, என் மகனை என்னிடம் மீட்டுத் தாருங்கள்” எனக் கண்ணீருடன் கோரியுள்ளார்.
எவ்வாறாயினும், இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை வெளி விவகார அமைச்சு, இந்த விவகாரத்தை மிக நெருக்கமாகக் கண்காணித்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் கொழும்பில் உள்ள சவுதி அரேபியத் தூதரகத்துடன் இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், சிவராசா அனுஜனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








