சவுதி அரேபியாவில் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டுவரும் இலங்கைப் பிரஜையான அனுஜன் சிவராசாவின் வழக்கை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் தகவலின்படி, ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் வழக்கின் முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், கொழும்பில் உள்ள சவுதி அரேபியத் தூதரகத்துடனும் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகிறது.
இராஜதந்திர வழிகள் ஊடாக சம்பந்தப்பட்ட சவுதி அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அனுஜன் சிவராசாவின் நலன்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், குறித்த இலங்கைப் பிரஜைக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.








