புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தம்புள்ளை இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட 05 மெகாவொட் கொள்ளளவு கொண்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.
இதற்கான நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்றது.
10.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக ஆண்டுதோறும் சுமார் 7,500 வீடுகளின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.
இதன் மூலம் ஆண்டுதோறும் காபனீரொக்சைட் (CO₂) வெளியேற்றத்தை சுமார் 6,440 மெட்ரிக் தொன்களால் குறைக்க முடிவதுடன், டீசல் மூலம் மின் உற்பத்தி செய்வதற்காக ஆண்டுதோறும் பயன்படுத்தப்படும் சுமார் 2.5 மில்லியன் லீற்றர் எரிபொருளையும் சேமிக்க முடியும்.
இதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 3 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை நாட்டுக்கு சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் முழுமையான பங்களிப்புடன் இத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், நிர்மாணப் பணிகளின்போது பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 150 பேருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைத்துள்ளன.
நினைவுப் பலகையைத் திறந்து வைத்து, தம்புள்ளை இப்பன்கடுவ சூரிய மின் உற்பத்தி நிலையத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
இதன்போது கட்டுப்பாட்டு அறைக்குச் சென்ற ஜனாதிபதி, மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.
இத்திட்டத்தின் கீழ் பல சமூக நலத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஜனாதிபதி அடையாள ரீதியாகவும் கலந்துகொண்டார்.








