சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருந்தகத்தையும் உள்ளடக்கிய பணியாளர் குடியிருப்பு வளாகத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை (19) நடைபெறவுள்ளது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
வடமாகாண மக்களுக்கு வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் புதிய வேலைத்திட்டங்களின் கீழ், இந்தத் திட்டங்கள் மாகாண சபையின் ஏற்பாடுகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய மருந்தகத்துடன் கூடிய பணியாளர் குடியிருப்பு வளாகத்தை அமைப்பதற்காக 282.52 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கட்டுமானப் பணிகளை 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வைத்தியசாலையின் லிஃப்ட் வசதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்காக 53 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.வடமாகாண சபையின் விதிமுறைகளின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம் 2027 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளது.








