By ; Afra Ansar
Colombo Times
களுத்துறை முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு சுமார் 3 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி (Solar Panel) திட்டம் கடந்த 12ஆம் திகதி சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் பழைய மாணவியர் சங்கத்தின் அனுசரணையிலும் நெறிப்படுத்தலிலும் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் திறப்பு விழா, கல்லூரி அதிபர் திருமதி சாஜிதா மியாத் தலைமையில் காலை 9 மணியளவில் நடைபெற்றது.
பாடசாலையின் பழைய மாணவியர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் பிரதம பேச்சாளராக பேருவளை ஜாமியா நலீமியா கலாபீடத்தின் முதல்வர் அஷ்-ஷேஹ் ஏ.சி. அகார் முஹம்மத் கலந்து கொண்டார்.
மேலும், ஊரின் முக்கியஸ்தரும் பிரபல கல்வியாளரும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் கணிதத்துறைத் தலைவருமான கலாநிதி அல்ஹாஜ் எம்.ஸட்.எம். மல்ஹர்தீன், கல்லூரியின் முன்னாள் அதிபர்களான திருமதி நாஜிபா அமீர் ஹம்சா மற்றும் திருமதி ஷாஃபி அளவி, பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுச் செயலாளர் அல்ஹாஜ் ஹிஷாம் சுஹைல் உள்ளிட்ட உறுப்பினர்கள், முன்னாள் ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது உரையாற்றிய பிரதம பேச்சாளர், பாடசாலையின் பழைய மாணவியர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ள இந்தத் திட்டம் ஏனைய பாடசாலைகளுக்கும் முன்மாதிரியாக அமையக்கூடிய சிறந்த முன்னெடுப்பாகும் எனத் தெரிவித்து, பழைய மாணவியர்களைப் பாராட்டினார்












